விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை மூர்த்திநாயக்கன்பட்டியில்
உள்ள ஆர்.பி. பட்டாசு ஆலையில் நேற்று(28.06.26) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. ஞாயிறு
விடுமுறை என்பதால் தொழிலாளர்கள் உயிர் தப்பியுள்ளனர்.
தொடரும் பட்டாசு வெடி விபத்துகள் குறித்து கடந்த மே5ம் தேதி நான் எழுதிய கட்டுரையை
இங்கே பகிர்கிறேன்.
……………………………………………………………………………………………………………
இந்தியாவின் மொத்த பட்டாசு உற்பத்தியில்
70 முதல் 90 சதம் வரையிலான பட்டாசுகள் சிவகாசியில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.
விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசி, சாத்தூர், வேம்பக்கோட்டையில் அரசின் உரிமம் பெற்ற
பெரிய தொழிற்சாலைகளிலும் கோவில்பட்டி, அருப்புக் கோட்டை, விருதுநகரின் நகரப்பகுதிகளில்
சிறு ஷெட்டுகளில் சப்காண்ட்ராக்ட் முறையிலும் வேம்பக்கோட்டை, சாத்தூர், காரியப்பட்டி
மற்றும் அருப்புக்கோட்டை கிராமப்பகுதிகளில் பீஸ்ரேட் அடிப்படையில் வீட்டுத் தொழிலாக
பட்டாசு உற்பத்தி நடைபெறுகிறது.
ஏழரை முதல் பத்து இலட்சம் வரையிலான
தொழிலாளர்களுக்கு இத்தொழில் வேலை வாய்ப்பளிப்பளிக்கிறது. சிவகாசியின் 800 முதல் 1000
வரையிலான பட்டாசு தொழிற்சாலைகளில் தீபாவளி காலங்களில் மூன்று முதல் நான்கு இலட்சம்
தொழிலாளர்கள் நேரடியாகவும் சிறு ஷெட்டுகள், வீடுகளில் இரண்டரை முதல் மூன்றறை இலட்சம்
தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். வேலைவாய்ப்பளித்தாலும் பட்டாசு தயாரிப்பில் சல்பர்,
பொட்டாசியம், நைட்ரேட், அலுமினியம் பவுடர் போன்ற எளிதில் தீப்பிடிக்கும் வெடிப்பு ஏற்படுத்தக்
கூடிய கெமிக்கல் உபயோகிக்கபடுவதால் இயல்பிலேயே இத்தொழில் ஆபத்தானதாக உள்ளது.
1980-90ஆம் ஆண்டுகளில் இத்தொழில் விரிவடைந்தது. 1991ல் ஏற்பட்ட
மிகப் பெரிய விபத்தில் 39பேர் இறந்தனர்.
65பேர் காயமடைந்தனர். 2000–2012 காலகட்டத்தில்,
88 தொழிற்சாலைகளின் விபத்துகளில் 237பேர் உயிரிழந்தனர். 2019-2025 வரையிலான 6 ஆண்டுகளில்
201 விபத்துகளும் 486 மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
30 ஆண்டுகளாக விபத்துகள், மரணங்களின் எண்ணிக்கை கூடுகிறதே தவிர குறையவில்லை.
வானில் வண்ணப் பூப்போன்று சிதறும் பாட்டாசுகள் மக்களின் மனதை பெருமகிழ்ச்சியில்
ஆழ்த்துகின்றன. ஆனால் அப்பட்டாசை தயாரிக்கும் தொழிலாளர்களின் உடல்களோ வெடிவிபத்தால்
தலைவேறு முண்டம் வேறாக சிதறுவதும் அடையாளம் காணமுடியாத அளவு கருகுவதும் உயிர்பிழைத்தாலும்
மரணவலியில் வாதைப்பட்டு சிறிது காலத்திற்குள் இறப்பதுமான சொல்லொணாத் துயரங்கள் பெரிதும்
கண்டுகொள்ளபடாத பெரும் சமூக அவலமாகும். அன்பிற்கினியவர்களின் மரணித்த உடலை அடையாளம்
காணமுடியாததும் அதற்கான டிஎன்ஏ பரிசோதனைகளில் அலைவதுமான கொடூரங்கள் பட்டாசு தொழிலாளர்களின்
குடும்பங்களில் தொடர்வேதனையாக உள்ளது.
இத்தொழிலின் ஆபத்துகளை தடுப்பதற்காக Explosives Act, 1884 உள்ளிட்டு பல சட்டங்கள்
அமலில் உள்ளன. ஆனால், எவ்வளவு கெமிக்கல் வைத்திருக்கலாம்,
தொழிலாளர்களின் எண்ணிக்கை, கட்டிடங்களுக்கு இடையிலான இடைவெளி,
கெமிக்கல் கலப்பது, காயவைப்பது, பண்டல் கட்டுவதற்கு தனித்தனி பகுதிகள்
அமைக்கபடுவது ஆகியவற்றிற்கான விதிமுறைகள் அனைத்தும் மீறப்படுகின்றன.
அரசின் உரிமம் பெறாமல் சப்-காண்ட்ராக்ட் முறையில் இயங்குகின்ற யூனிட்களில் விபத்துகள் அதிகம்
நடைபெறுகின்றன. பத்துக்கு பத்தடி அறையில் நான்கு பேர் அமர்வதற்கு பதிலாக 20 ஆட்கள்
அமர்வது, பல ரசாயன பொருட்களை ஒரே இடத்தில் வைப்பது, அவற்றைக் கையாள பயிற்சி
பெற்ற ஆட்கள் நியமிக்காதது போன்றவை விபத்துகளை உருவாக்குகின்றன. செலவுகளை
குறைத்து அதிக இலாபம் பெறுவதற்காக பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்படுவது விபத்துகளுக்கான
முதன்மை காரணமாகிறது.
இலாபத்தின் பெரும் பங்கை தனதாக்கி கொள்ளும் பெரிய நிறுவனங்கள் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான
எந்த பொறுப்பையும் ஏற்பதில்லை. இந்நிறுவனங்கள் பட்டாசு உற்பத்தியில்(production)
நேரடியாக ஈடுபடுவதில்லை. பெட்ரோலியம் மற்றும்
வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பின்(PESO) உரிமம் பெற்று முழு உற்பத்தியையும் கட்டுபடுத்துகின்ற
இப்பெரு நிறுவனங்கள் இரசாயனங்கள் கொள்முதல், உற்பத்தி ஒருங்கிணைப்பு, இறுதிகட்ட மேற்பார்வை,
காண்ட்ராக்ட் மற்றும் ஏற்றுமதிக்கான பணிகளை மட்டும் மேற்கொள்கின்றன. தொழிலாளர்களின்
பாதுகாப்பை நேரடி உற்பத்தியில் ஈடுபடும் சிறுநிறுவனங்களிடம் தள்ளிவிடுகின்றன.
50 முதல் 200 பணியாளர்களை வேலைக்கமர்த்திக்
கொள்ளும் உரிமமுள்ள சிறிய, நடுத்தர தொழிற்சாலைகளில் பேக்கிங் மற்றும் கெமிக்கல் கலவை
பணிகளுக்கான தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள் பணியாற்றுகின்றனர். உண்மையில், சிறிய
ஷெட்டுகளில் சப்-காண்ட்ராக்ட் முறையிலும், அவுட் சோர்சிங் மூலம் வீட்டுத் தொழிலாக பீஸ்ரேட்
முறையிலும்தான் பெருமளவிலான உற்பத்தி பணி நடைபெறுகிறது. சிறிய ஷெட் என்பது பெரும்பாலும்
கிராமங்களின் உட்புறத்தில் ஒரு வீடு போல இருக்கும் அதில் 5ல் இருந்து 20பேர் வேலை செய்கின்றனர்.
குழாய்(ஷெல்) சுத்துதல், குழாய்க்கு
சாயம் முக்குதல், குழாய் வெட்டுதல், தார்மண் பூச்சு, டிஸி வளையம் குத்துதல், சாம்பல்
செலுத்துதல், மருந்துகள் எடைபோடுதல், மருந்து கலவை அலுசுதல்(சலித்தல்), பவுடர் செலுத்துதல்,
வாய்மண் பூசுதல், வளையம் குத்துதல், கரிதூசி அலசுவது, திரி டிப்பிங் போடுதல், கருந்திரிக்கு
தாள் சுற்றுதல், திரி அறுத்தல், திரி சொருகுதல், தூர் சாயம் அடித்தல், வெடி தட்டுதல்,
சரம் பின்னுதல், வெடி உருட்டுதல், கேஸ் போடுதல் உள்ளிட்ட அதிக உடலுழைப்பு வேலையைக்
கொண்டதாக பட்டாசு தொழில் உள்ளது. இதில் 5க்கும் மேற்பட்ட பணிகள் வீடுகளில் செய்வதற்கு
பீஸ் ரேட்டுக்கு கொடுக்கப்படுகின்றன. சிறிய, நடுத்தர யூனிட்டுகளில் சிலவும் ஷெட்டுகளில்
பலபணிகளும் செய்யப்படுகின்றன.
உற்பத்தியின் பெரும்பகுதி காண்ட்ராக்ட்
முறை என்பதால் தொழிலாளர்கள் மிக குறைந்த கூலியும் பிஎப், இஎஸ்ஐ பெறாமலும் பாதுகாப்பற்ற
சூழலிலும் பணிபுரிகின்றனர். பெண்களின்
மறைக்கப்பட்ட உழைப்பை(invisible labour) கொண்டதாக உள்ள இத்துறையில் குழந்தைகள் பராமரிப்பிற்கான முறையான
வசதிகள் இல்லை. சில கம்பெனிகள் பணியிடத்திலிருந்து சிறிது தூரத்தில் இதற்காக அமைக்கும்
குடிசை பிள்ளை தொட்டி எனப்படுகிறது. இருப்பினும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளை பராமரிக்க
குறைந்த கூலிக்கு வயதான பெண்கள் இருவர் மட்டுமே அதில் பணியமர்த்தப் படுகின்றனர்.
இத்தொழிலில், மருந்து கலவை அலுசுதல்,
பவுடர் செலுத்துதல் ஆகியவை உயிருக்கு ஆபத்தானவையாகும். குறிப்பாக, பவுடர் செலுத்துதல்
பல மடங்கு ஆபத்தான பணியாகும். கொஞ்சம் கவனம் சிதறினாலும் அலுமினிய பவுடர் தீப்பிடித்து
வெடித்துவிடும். இப்பணியில் ஆண்களே ஈடுபடுகின்றனர். உள்ளாடைகள் மட்டுமே அணிந்து வேலை
செய்கின்றனர். காலை 6மணி துவங்கி 9மணிக்குள், வெயில் அதிகம் இல்லாத நேரத்தில் இப்பணி
முடிக்கபட வேண்டும். கூடுதல் வெப்பம் இருந்தால் வெடித்து தீப்பற்றும்.
ஆனால், தீபாவளி போன்ற அவசர காலங்களில்
பணியாளர் எண்ணிக்கை உயர்த்துவது, பகல் நேரங்களிலும் வேலை செய்வித்தல், அதிகமான வேலை
பளு போன்ற விதிமீறல்கள் விபத்துகளை அதிகரிக்கின்றன. இந்த வேலையின் போது உடலில் படியும்
அலுமினிய பவுடரை போக்க சோப்பு தேய்த்து ஒன்றறை மணிநேரம் குளித்தாக வேண்டும். அப்படி
குளித்தாலும் பலருக்கு உடல் முழுவதும் சொறி போன்ற நோய்களும் துகள் மூக்கினுள் செல்வதால்
நுரையீரல் சம்பந்தமான நோய்களும் உருவாகிறது. இவ்வளவு ஆபத்தான பணியில் இருப்பவருக்குகூட
வருங்கால வைப்புநிதி, மருத்துவ வசதி எதுவும் கிடைப்பதில்லை.
உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு
20லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 15இலட்சமும் இழப்பீடாக கொடுக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற
உத்தரவுகள் இருந்தபோதிலும் பெரும்பாலான நிறுவனங்கள் இழப்பீடு தருவதேயில்லை. சில நிறுவனங்கள்
ரூ10000த்திலிருந்து ஒரு லட்சம் வரையிலான இழப்பீடுகளே தந்துள்ளன. தொழிற்சங்கங்களின்
தொடர் போராட்டங்களால் அரசிடமிருந்து ஐந்து இலட்சம் வரையிலான இழப்பீட்டு தொகையை பெறமுடிந்திருக்கிறது.
“இதைவிட அதிபயங்கரமான வெடி மருந்துகளை
பயன்படுத்தி ஆயுதங்கள் தயாரிக்கும் பணி இந்திய இராணுவத்தில் நடக்கிறது. ஆனால் எப்போதாவது
விபத்து நடந்ததாக நாம் கேள்விபட்டிருக்கிறோமா?” என கேள்வி எழுப்பும் இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரான பாலமுருகன் அவர்கள் “பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால்
ஆலைகளுக்கு சீல் வைக்க வேண்டும். சிவகாசி பகுதியில் இதுவரை அப்படி ஒரு ஆலைகூட மூடப்பட்டதாக
செய்தியே வரவில்லை. காரணம் அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்ய செல்வதில்லை. மாறாக லஞ்சம்
வாங்கவே செல்கிறார்கள். ஆய்வுக் கமிட்டியில் ஏஐடியுசி சிஐடியு போன்ற தொழிற்சங்கங்கத்தினரை
உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என பல வருடங்களாக கேட்கிறோம். இதுவரை நடக்கவில்லை”
என விமர்சிக்கிறார்.
பாதுகாப்பு சட்டங்களை முறையாக செயல்படுத்துவதும்
கடும் சுரண்டலுக்கு வழிவகுக்கும் காண்ட்ராக்ட் முறையை அடியோடு ஒழித்தால் மட்டுமே பட்டாசு
தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் உயிரும் காக்கப்படும்.
ஜி.மஞ்சுளா


No comments:
Post a Comment