சுதந்திரத்திற்கு பிறகான இந்திய நாடாளுமன்றத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்ட ரேணு சக்ரவர்த்தி, பார்வதி கிருஷ்ணன்
இருவரும் பெண்கள் எதிர்கொண்ட வரதட்சணை கொடுமை, விவாகரத்து மறுப்பு, பெண்களுக்கு சொத்துரிமை,
கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் காட்டப்பட்ட பாகுபாடுகள், மகப்பேறு விடுப்பு இல்லாமை
மற்றும் பெண் தொழிலாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கடுமையான விவாதங்களை
நாடாளுமன்றத்தில் நடத்தினர்.
அந்த வாதங்கள் பெண்களுக்கான சட்டங்களில் பல்வேறு மாற்றங்களும் திருத்தங்களும்
செய்து, பெண்களின் உரிமைகளை வாழ்க்கையை பாதுகாக்க வழிவகுத்தன. சமூக உற்பத்தியில், மறுஉற்பத்தியில்
பெண்கள் செலுத்திவரும் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை நோக்கு நிலையில்
இருந்து இருவரும் கருத்துகளை முன்வைத்தது வரலாற்றுச்
சிறப்புடையதாகும்.
ரேணு சக்ரவர்த்தி இந்திய நாடாளுமன்றத்தில் 15ஆண்டுகள்(1952-67) உறுப்பினராக செயல்பட்டார். பெண்கள் நலனுக்கான பல்வேறு
சட்டங்கள் உருவான காலகட்டம் அது. அன்றைக்கிருந்த நிலவுடமை ஆணாதிக்க கருத்தியலுக்கு
எதிராக வலிமையான வாதங்களை அவர் முன்வைத்தார்.
இந்து வாரிசுரிமை சட்ட மசோதாவின்(1955) மீதான விவாதங்களில் சொத்துரிமை
மற்றும் தத்தெடுப்பில் பெண்களுக்கான சமஉரிமைக்காக ரேணு சக்ரவர்த்தி முன்வைத்த வாதங்கள் அக்காலத்திய நிலவுடைமை சிந்தனைகளை குத்தி
கிழித்தன. பழைய மதக் கோட்பாடுகளை நிராகரித்து நவீன
காலத்திய சிந்தனையை அவர் முன்வைத்தார். பொருளாதாரத்தில் யாரையாவது சார்ந்தே பெண்கள் வாழ்ந்து வந்த அன்றைய நிலையை மாற்றியமைப்பது என்பது அவரது விவாதங்களின் மையமாக இருந்தது.
பொருளாதார சுதந்திரம் இல்லாத
பெண்களுக்கு, குறிப்பாக
கணவரை
இழந்த பெண்களுக்கு, பராமரிப்பு
(Maintenance) என்பது
மிகவும் அவசியமான ஒன்று என்று வாதிட்ட அவர் சொத்துரிமை இல்லாத
நிலையில், பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பராமரிப்புத் தொகை அவசியம்
என்று வலியுறுத்தினார். தனது தொகுதியில் உள்ள கிராமப்புறங்களில் கணவரை
இழந்த ஏராளமான பெண்கள் "வீடற்றவர்களாகவும், சொத்தற்றவர்களாகவும்" இருப்பதை அவர்
சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு வாழ்வாதாரமோ அல்லது அடைக்கலம் கொடுக்க ஆட்களோ
இல்லாத அவலநிலையை அவர் எடுத்துரைத்தார்.
- மருமகளின்
பராமரிப்பு உரிமை: கணவரை இழந்த தனது மருமகளுக்குப் பராமரிப்பு வழங்க வேண்டிய கட்டாயம் மாமனாருக்கு இல்லை
என்ற அன்றைய இந்து சட்ட நிலையை அவர் விமர்சித்தார். கூட்டுக்குடும்பச் சொத்து
(Coparcenary
property) இருந்தால் மட்டுமே பராமரிப்பு வழங்க வேண்டும் என்ற
நிபந்தனையை அவர் ஏற்கவில்லை. மாமனார் தனது சொத்தை மற்றவர்களுக்கு உயில் எழுதி
வைத்துவிட்டால், விதவை
மருமகள் பராமரிப்பின்றித் தவிக்கும் நிலை உள்ளது. எனவே, கூட்டுக்குடும்பச்
சொத்து இல்லாவிட்டாலும், மருமகள்களைப் பராமரிக்கும் பொறுப்பு மாமனாருக்கு
இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
- பிரிந்து
வாழும் உரிமை: பெண்கள் தங்கள் கணவருடன் வாழ முடியாத
சூழல் ஏற்படும்போது,
சமூகப் புறக்கணிப்பு மற்றும் குழந்தைகளின் நலன் கருதி விவாகரத்து பெறப்
பெரும்பாலும் விரும்புவதில்லை என்று குறிப்பிட்ட அவர் விவாகரத்து பெறாமலேயே கணவனைப் பிரிந்து தனியாக
வாழ்வதற்கும், அந்த
நேரத்தில் பராமரிப்புத் தொகை (Maintenance) பெறுவதற்கும் பெண்களுக்கு
உரிமை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.
- "ஒழுக்கமற்றவர்"
(Unchaste) என்ற
சொல்லுக்கு எதிர்ப்பு: பராமரிப்புத்
தொகை பெறுவதற்குப் பெண்ணின் "ஒழுக்கம்" (Chastity) ஒரு
நிபந்தனையாக இருப்பதை அவர் எதிர்த்தார். சமூகத்தில் ஒரு பெண் கணவனைப்
பிரிந்து தனியாக வாழ்ந்தாலே அவரை இழிவுபடுத்த இந்தச் சொல் தவறாகப்
பயன்படுத்தப்படுவதால்,
"ஒழுக்கமற்றவர்" என்ற சொல்லைச் சட்டத்திலிருந்து நீக்கிவிட்டு, அதற்குப்
பதிலாகத் தெளிவான வேறு சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று யோசனை கூறினார்.
கல்வி, வேலைவாய்ப்பை பெண்கள் எளிதில் பெறஇயலாத
அக்காலகட்டத்தில், கணவரை இழந்த பெண்கள் சொத்து மற்றும் பராமரிப்பு
இல்லாமல் வீதியில் விடப்படுவதைத் தடுக்க சட்டபூர்வமான பாதுகாப்பு அவசியம் என்பது ரேணு சக்ரவர்த்தியின் வாதமாகும்.
அதேபோல் பெண் குழந்தைகளைத்
தத்தெடுப்பதை ஒரு சமூக முன்னேற்றமாகக் கருதியதால் அவர் அதனை
ஆதரித்தார். இந்து சட்டத்தில் முதல்முறையாக பெண்
குழந்தைகளைத் தத்தெடுக்க அனுமதி வழங்கப்படுவதை முழுமனதுடன் வரவேற்றார். சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத
காலத்திலேயே, பல
தம்பதிகள் பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்ததை அவர்
சுட்டிக்காட்டினார். ஆனால்,
அத்தகைய குழந்தைகளுக்குச் சொத்தில் சட்டப்பூர்வ உரிமைகளை வழங்க உயில் (Will) எழுத வேண்டிய
கட்டாயம் இருந்ததை அவர் விளக்கினார்.
- குழந்தைகள்
இருப்பவர்களுக்கும் உரிமை: ஏற்கனவே
தங்களுக்கு ஆண் அல்லது பெண் குழந்தைகள் இருப்பவர்களுக்கும் கூட, மற்றொரு
குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்றார்.
- பாதுகாப்பு
குறித்த அச்சங்களுக்குப் பதில்: 15 வயது பெண்
குழந்தையை ஒரு ஆண் தத்தெடுக்கும்போது தவறான நோக்கங்கள் (ignoble reasons) இருக்கலாம்
என எழுந்த அச்சங்களுக்குப் பதிலளித்த அவர், அத்தகைய தவறான எண்ணங்கள் ஆண்
குழந்தையைத் தத்தெடுக்கும்போதும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வாதிட்டார். எனவே, தத்தெடுப்பு
கொள்கையிலேயே இத்தகைய சந்தேகங்களை எழுப்புவது சரியல்ல என்றார்.
- பாசமே
அடிப்படை: தத்தெடுப்பு என்பது சட்டக்
கட்டுப்பாடுகளை விட,
இயல்பான பாசப் பிணைப்புகள் மற்றும் மக்களின் நல்லெண்ணத்தின் அடிப்படையில்
அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தம்பதிகள்
விரும்பினால், 15 வயது
வரையுள்ள ஆண் அல்லது பெண் குழந்தையைத் தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று
அவர் கூறினார்.
இந்து வாரிசுரிமைச் சட்டம் (1956) மற்றும் இந்து
தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் (1956) ஆகியவற்றின் இறுதி முடிவுகளில் ரேணு
சக்ரவர்த்தியின் வாதங்கள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு, தத்தெடுப்பு உரிமைகள் மற்றும் சொத்துரிமை
ஆகியவற்றில் ஒரு சமநிலையான மற்றும் நீதியான முடிவை எடுக்க அவரின் வாதங்கள் சட்டமியற்றுபவருக்கு
பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி அதை சட்டத்திலும் பிரதிபலிக்கச்
செய்தன. பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் தத்தெடுப்பு
தொடர்பான அவரது முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டன, ஆனால் ஒழுக்கம் சார்ந்த சட்டச் சொற்கள்
மற்றும் கூட்டுக்குடும்பச் சொத்து தொடர்பானவற்றில் அவரது
கருத்துக்கள் முழுமையாக ஏற்கப்படவில்லை.
Ø இறுதிச்
சட்டத்தில் பெண் குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை அங்கீகரிக்கப்பட்டது.
Ø விவாகரத்து
பெற விரும்பாத பெண்கள், கணவனைப்
பிரிந்து தனியாக வாழும் காலத்திலும் பராமரிப்புத் தொகை (Maintenance) பெறுவதற்கான உரிமை (பிரிவு 18(2)) சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
Ø பெண்கள்
சொத்துக்களை "வரம்புக்குட்பட்ட உரிமையாளராக" (Limited owner) மட்டுமே
வைத்திருக்க முடியும் என்ற நிலையை மாற்றி, அவர்களுக்கு முழுமையான உரிமையை (Absolute ownership) வழங்க
வேண்டும் என்ற அவரது வாதம் ஏற்கப்பட்டு
அதன்படி, பிரிவு 14-ன் கீழ் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் சொத்துக்களை முழு
அதிகாரத்துடன் அனுபவிக்கும் உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டது.
Ø தந்தையர்
உயில்(Will) மூலம்
மகள்களுக்குச் சொத்து கிடைக்காமல் செய்துவிடுவார்களோ என்ற அவரது அச்சம் கவனத்தில் கொள்ளப்பட்டு, அன்றைய சட்ட அமைச்சர் ஒரு முக்கியத்
திருத்தத்தைக் கொண்டுவந்தார். அதன்படி, ஒரு நபர் தனது
சொத்தை உயில்
மூலம் யாருக்கு வழங்கினாலும், அந்தச் சொத்திலிருந்து பராமரிப்பு பெறத் தகுதியுள்ள
வாரிசுகளின் (பெண்கள் உட்பட) உரிமையைப் பறிக்க முடியாது என்ற
பாதுகாப்புச் சேர்க்கப்பட்டது.
Ø விவசாய
நிலங்களில் மகள்களுக்குச் சமபங்கு வழங்குவதை மாநில அரசுகள் தடுப்பது குறித்த அவரது
அச்சங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டன. இருப்பினும், நிலச்
சீர்திருத்தம் தொடர்பான மாநிலச் சட்டங்களுக்குச் சட்டத்தின் பிரிவு 4(2)-ன் கீழ்
பாதுகாப்பு வழங்கப்பட்டது.
Ø மகன்கள்
மட்டுமே பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என்ற பழைய எண்ணத்தை மாற்றி, பொருளாதார
வசதியுள்ள மகள்களும் தங்கள் வயதான பெற்றோரைப் பராமரிக்கும் சட்டபூர்வப் பொறுப்பை (Onus) ஏற்க வேண்டும் என்ற புதிய
சமூகச் சிந்தனையை அவர் முன்வைத்தார். இது பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை
கேட்கும்போது அவர்களுக்குரிய சமமான கடமையாகவும் இருக்கும் என்று அவர் கருதினார்.
Ø "ஒழுக்கமற்றவர்"(Unchaste) என்ற நிபந்தனை
அல்லது சொல் பயன்படுத்தப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்த போதிலும் இறுதிச் சட்டத்தில் (பிரிவு 18(3)) ஒரு மனைவி "ஒழுக்கமற்றவராக"
இருந்தால் அவர் பராமரிப்பு பெறத் தகுதியற்றவர் என்ற நிபந்தனை நீடித்தது.
Ø கூட்டுக்குடும்பச் சொத்து (Coparcenary property) இல்லாவிட்டாலும் மாமனார் தனது மருமகளைப் பராமரிக்க வேண்டும் என்று அவர் வாதிட்ட போதிலும் சட்டத்தின் பிரிவு 19(2)-ன்படி, கூட்டுக்குடும்பச் சொத்து இருந்தால் மட்டுமே மாமனார் பராமரிப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டது.
இந்து திருமண மசோதா (1955) தொடர்பான விவாதங்களிலும் ரேணு சக்ரவர்த்தி மிக கூர்மையான கருத்துக்களை முன்வைத்தார்.
திருமண மசோதாவில் ‘பெண்கள்
ஆண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும்’ என்றிருந்த பிரிவை அவர் கடுமையாக எதிர்த்தார். பெண்களுக்குச்
சமமான சொத்துரிமை இல்லாத நிலையில், அவர்கள் ஆண்களுக்கு ஜீவனாம்சம் வழங்கக் கோருவது
நியாயமற்றது என்று
அவர் கூறினார். "எங்களுக்குச் சமமான சொத்துரிமைச் சட்டங்களை முதலில்
கொடுங்கள், அதன்
பிறகு நாங்கள் ஜீவனாம்சம் வழங்கத் தயாராக இருக்கிறோம்" என்று அவர் சவால்
விடுத்தார்.
அதேபோல் தாம்பத்ய உரிமைகளை
மீட்டெடுத்தல் (Restitution
of Conjugal Rights) என்ற சட்டப்பிரிவை அவர் "கடந்த காலத்தின்
ஒரு காட்டுமிராண்டித்தனமான எச்சம்" (barbaric relic of the past) என்று
விமர்சித்தார். இருவர் இணைந்து வாழ விரும்பாதபோது, அவர்களை நீதிமன்றம் மூலம் கட்டாயப்படுத்தி
வாழச் சொல்வது அருவருப்பானது என்றும், அதற்குப் பதிலாக நீதிமன்ற ரீதியான
பிரிவினை (judicial
separation) வழங்குவதே நேர்மையான வழி என்றும் அவர் வாதிட்டார்.
திருமணம் செல்லாது என்று
அறிவிக்கப்பட்டாலும், அத்தகைய
திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு முழுமையான சட்டப்பூர்வ அங்கீகாரம் (legitimacy) வழங்கப்பட
வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பெற்றோரின் தவறுகளுக்காகக் குழந்தைகள்
தண்டிக்கப்படக்கூடாது என்றும், சொத்துரிமையில் அவர்களுக்குக் காட்டப்படும் பாகுபாடுகள்
களையப்பட வேண்டும் என்றும் கூறினார். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு
விஷயத்தில் தாய்மார்களுக்கே
முன்னுரிமை அளிக்கப்பட
வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
விவாகரத்து என்பது இந்து சமூகத்தை அழித்துவிடும் என்ற அச்சத்தைப் புறந்தள்ளிய அவர், ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் (மலபார், பம்பாய், மதராஸ்) விவாகரத்து நடைமுறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். விவாகரத்து என்பது ஒரு கடைசி முயற்சியாகவே இருக்கும் என்றும், சமூகத்தின் ஒழுக்க விழுமியங்கள் இதனால் சிதைந்துவிடாது என்றும் அவர் கூறினார்.
பெண் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்தவும், அவர்களுக்கு
இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்கவும் பல வலுவான வாதங்களை அவர் முன்வைத்தார்:
அரசியலமைப்புச் சட்டம் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று
கூறும்போது, நடைமுறையில்
இந்தியாவில் பாலின
அடிப்படையில் நிலவும் ஊதியப் பாகுபாட்டை (discriminatory wages on basis of sex) ஒழிக்க அரசு ஏன்
இன்னும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். சம ஊதியக் கொள்கையை அரசு வெறும் 'பரிந்துரையாக' (recommendation) மட்டும்
பார்க்காமல், அதை ஒரு
கட்டாயமான விதியாகக் கருத வேண்டும் என்பது அவரது வாதமாக இருந்தது.
தேயிலைத் தோட்டங்களில்
ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஊதியத்தில் பெரிய வித்தியாசம் நிலவுவதை அவர்
எதிர்த்தார். உதாரணமாக, தேயிலை
இலை பறிக்கும் பணியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் ஒரே வேலையைச் செய்தாலும், ஆண்களுக்கு 50 பைசா வரை கூடுதல்
ஊதியம் வழங்கப்பட்டது.
உண்மையில், இலை
பறிக்கும் பணியில் பெண்களே அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாக இருந்தும், அவர்களுக்குக்
குறைந்த ஊதியம் வழங்கப்படுவதை அவர் கண்டித்தார். சம ஊதியச் சட்டம்
அமல்படுத்தப்பட்ட பிறகு, தேயிலைத்
தோட்டங்களில் பெண்
தொழிலாளர்களின் வேலைப்பளு (Workload) அதிகரிக்கப்பட்டது குறித்தும் அவர் கேள்விகளை
எழுப்பினார். சம ஊதியம் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக நிறுவனங்கள் பெண்களைப்
பணிநீக்கம் செய்வது அல்லது அவர்களது வேலை நேரத்தை அதிகரிப்பது போன்ற தந்திரங்களைக்
கையாள்வதை அவர் சுட்டிக்காட்டினார்.
மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் (Pharmaceutical Industries) பணிபுரியும்
பெண்கள் திருமணம்
செய்து கொண்ட உடனேயே வேலைநீக்கம் செய்யப்படும் முறையை அவர்
கடுமையாக எதிர்த்தார். இது பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்கவிடாமல்
தடுக்கும் பாகுபாடான செயல் என்று அவர் வாதிட்டார். பெண்கள் திருமணமாகாமல் இருக்க
வேண்டும் என்று நிறுவனங்கள் நிபந்தனை விதிப்பது அடிப்படை உரிமை மீறல் என்றார். தனியார் விமான நிறுவனங்கள் பெண்களை விமானிகளாகப்
பணியமர்த்தும்போது,
இந்தியன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன் (IAC) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பெண்களை விமானிகளாக(Pilots) நியமிப்பதில் பாகுபாடுகள்
காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
ரேணு சக்ரவர்த்தி போன்றே பார்வதி கிருஷ்ணனும் குழந்தை மணம், வரதட்சணை,
மகப்பேறு விடுப்பு உட்பட பெண்களின் உரிமைக்கான பல்வேறு வாதங்களை முன்வைத்து நாடாளுமன்றத்தில்
போராடியவராவார். பார்வதி கிருஷ்ணன்
1954 –1957ல் மாநிலங்களவை உறுப்பினராகவும், 1957–1962 மற்றும் 1974–1980ல் மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். குறிப்பாக, சம ஊதியம் (Equal Pay), சம ஊதியச் சட்டம் அமலாக்கம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் குறித்து இவர் முன்வைத்த வாதங்கள் இன்றைக்கும்
முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.
- சம ஊதியச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ கடமைகளான ஆலோசனைக் குழுக்களை (Advisory Committees) அமைப்பதிலும், புகார்களைக் கையாள சிறப்பு அதிகாரிகளை (Special Officers) நியமிப்பதிலும் மாநில அரசுகள் காட்டும் சுணக்கத்தை பற்றி பார்வதி கிருஷ்ணன் கேள்விகளை எழுப்பினார். மாநில அரசுகள் தங்கள் கடமைகளைச் செய்வதில் அலட்சியமாக (Smug and complacent) இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். தொழிற்சங்கங்கள் அனுப்பும் தீர்மானங்கள் மற்றும் புகார்கள் மீது மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று அவர் கோரினார்.
- சம
ஊதியச் சட்டத்தின் பலன்கள் வெறும் தோட்டத் தொழிலாளிகளுக்கு மட்டும் அல்லாமல், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் (agricultural
labourers and construction workers) போன்ற அமைப்புசாரா
துறையினருக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
- அமைப்புசாரா
தொழிலாளர்களைப் பாதுகாக்க, 1948-ஆம் ஆண்டின் குறைந்தபட்ச
ஊதியச் சட்டத்தில் (Minimum Wages Act) திருத்தங்களைக்
கொண்டு வருவதற்கான மசோதாவை (Amendment Bill) அவர்
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் மூலம் அனைத்து வகையான வேலைகளுக்கும்
குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சம ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய முயன்றார்.
- அமைப்புசாரா
துறையின் மற்றொரு முக்கியப் பிரிவான பீடி தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை
மேம்படுத்தவும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும்
தனி மசோதாவைக் கொண்டு வந்தார்.
சம ஊதியச் சட்டம் என்பது
காகிதத்தில் மட்டும் இல்லாமல், உரிய நிர்வாகக் கட்டமைப்பு (சிறப்பு
அதிகாரிகள் மற்றும் குழுக்கள்) மூலம் விரைவாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதையும்,
அது அனைத்துத் துறை பெண் தொழிலாளர்களையும் சென்றடைய வேண்டும் என்பது
அவரது வாதங்களின் மையமாக இருந்தது. பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்துவது மற்றும் திருமணப் பதிவு ஆகியவற்றில் அவர் அதிக கவனம் செலுத்தினார்.
Ø திருமணங்கள்
அனைத்தும் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் (Compulsory Registration) என்று அவர் மிக வலுவாக வாதிட்டார். இதுவே
திருமணத்திற்கான இறுதி ஆதாரமாக இருக்க வேண்டும் என்றும், இதன்
மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பெண்களை வேலைக்காரிகளாக நடத்தும்
திருமணங்கள் மற்றும் செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் நடக்கும் போலித்
திருமணங்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்கப் பதிவு அவசியம் என்று அவர் கூறினார்.
Ø பெண்களின்
திருமண வயதை 18 ஆக உயர்த்துவது, அவர்கள் ஒரு அறிவுள்ள
தாயாகவும், சிறந்த குடிமகளாகவும் உருவாக உதவும் என்று அவர்
வாதிட்டார். 15 வயதில் ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணையைப்
பற்றிச் சரியான முடிவெடுக்க முடியாது என்பது அவரது கருத்து.
Ø முதியோர்
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள குழந்தைகளை (குறிப்பாக மகன்களை) நம்பியிருக்கும்
நிலையை மாற்ற வேண்டும். அரசு முதியோருக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கினால்
மட்டுமே, சிறிய குடும்பக் கொள்கை மக்களிடையே வேரூன்றும்
என்று அவர் வாதிட்டார்.
Ø விவாகரத்து கோரும் போது "மனநலப் பாதிப்பு" (Unsound mind) என்ற காரணத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க, அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களின் சான்றிதழ் அவசியம் என்று அவர் கூறினார். மேலும், விவாகரத்து வழக்குகளை ஆறு மாதங்களுக்குள்ளும், மேல்முறையீடுகளை மூன்று மாதங்களுக்குள்ளும் விரைவாக முடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
ரேணு சக்ரவர்த்தி மற்றும் பார்வதி
கிருஷ்ணன் இருவரும் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தை ஆதரித்து
நாடாளுமன்றத்தில் வலுவான கருத்துக்களை முன்வைத்தனர். வரதட்சணை
முறையை ஒரு "வணிகமயமாக்கப்பட்ட தீமை" என்றும், சமுதாயத்தில் இன்னும் நிலவும் ஒரு வகை
"நிலப்பிரபுத்துவச் சுரண்டல்" என்றும்
ரேணு சக்ரவர்த்தி குறிப்பிட்டார். பெண்கள்
தங்கள் தந்தையின் சொத்தில் சமமான பங்கை அனுபவிக்க வேண்டும் என்றும், பொருளாதார ரீதியாக அவர்கள் சுதந்திரமாக இருக்கும்போது வரதட்சணைப்
பிரச்சினை குறையும் என்றும் வலியுறுத்தினார். வரதட்சணை
கேட்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும் என்றும், அரசு
அதிகாரிகளின் அனுமதியின்றி நீதிமன்றங்கள் நேரடியாகக் குற்றங்களை விசாரிக்க வழிவகை
செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.
வரதட்சணை தடுப்புச் சட்டத்தைக்
கொண்டு வரும்போது அரசு மிகவும் தயக்கத்துடனும், தோல்வி மனப்பான்மையுடனும்
செயல்படுவதாக பார்வதி கிருஷ்ணன் அரசை விமர்சித்தார். திருமணம் என்பது வரதட்சணையை நிபந்தனையாகக் கொண்ட ஒரு "அருவருப்பான ஒப்பந்தமாக" மாறக்கூடாது என்றும்,
கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் இத்தீமை
பாதுகாக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
வரதட்சணை கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் பண அபராதம்
விதிப்பதை விட சிறைத்தண்டனை விதிப்பதே சமூக மனசாட்சியைத் தூண்ட உதவும் என்று அவர்
கருதினார். வரதட்சணை குற்றங்களை காவல்துறை நேரடியாக
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் (Cognizable) மாற்ற
வேண்டும், அப்போதுதான் சட்டம் திறம்படச் செயல்படும் என
வலியுறுத்தினார்.
ரேணு சக்ரவர்த்தி, பார்வதி கிருஷ்ணன் இருவருமே வரதட்சணையை மனித கண்ணியத்திற்கு எதிரான ஒன்றாகக் கருதினர். மேலும், இருவருமே சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் இன்றி வெறும் சட்டங்கள் மட்டும் சமூகத் சீர்திருத்தங்களைக் கொண்டு வராது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர். இருவரின் இத்தகைய முற்போக்கான கருத்துகள், இந்திய பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதிலும், சமூகத்தில் அவர்களுக்குச் சமமான அந்தஸ்தைப் பெற்றுத் தருவதிலும் முக்கியப் பங்காற்றின. நூற்றாண்டு கால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வரலாற்றில், பெண்களை ஒடுக்கும் நிலவுடைமை ஆணாதிக்கத்தை எதிர்த்தும் பெண் தொழிலாளர்களை சுரண்டிய முதலாளித்துவத்திற்கு எதிராகவும் உரத்த குரலை எழுப்பி பெண்களின் உரிமைகளை காத்த கம்யூனிஸ்ட் போராளிகளாக இருவரின் பங்களிப்பும் நீங்கா இடம்பெறும்.
ஜி.மஞ்சுளா


No comments:
Post a Comment