Thursday, 4 June 2026

புரட்சி வீராங்கனைகள்

 

கிளாரா ஜெட்கின், குருப்ஸ்கயா, அலெக்சாண்ட்ரா கொலந்தாய், ரோசா லக்சம்பர்க் நால்வருக்குமான பொதுவான அம்சம் அவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் போராளிகள் என்பது மட்டுமல்ல, நால்வரும் மார்க்சிய தத்துவத்தை உறுதியாக பின்பற்றி அதனடிப்படையில் பெண்களின் உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் என்பதாகும். கொலந்தாய் மிக ஆரம்பநிலையிலும், ரோசா லக்சம்பர்க் சில மார்க்சிய நிலைபாடுகளிலும் லெனினோடு முரண்பட்டிருந்தாலும் நால்வரும் சீர்திருத்தவாதத்தை ஏற்காதவர்களாகவே இருந்தனர். மார்க்சிய திருத்தல்வாதம் மேலோங்கியுள்ள இன்றைய நிலையில் பாட்டாளி வர்க்க பெண்கள் இயக்கத்திற்கான அவர்களது சில முக்கிய பங்களிப்பை  நாம் அறிவது அவசியமாகும்.


கிளாரா ஜெட்கின்
1857 ஆம் ஆண்டு ஜெர்மனியின் சாக்சனி மாநிலத்தில் பிறந்தவர். இளம் வயதில் புரட்சிகர சோசலிச மாணவர் வட்டத்தின் மூலம் மார்க்சியம் கிளாராவிற்கு அறிமுகமாகியது. இதன் காரணமாக, கிளாரா கல்லூரியில் படிக்கும் போதே தனது 21ஆம் வயதில் ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சியில் இணைகிறார். அப்போது ஜெர்மனியில் சோசலிஸ்டுகளுக்கு சட்டப்படியான தடை இருந்ததால் கட்சியின் தலைமறைவு பணிகளில் ஈடுபடுகிறார். கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஓசிப் ஜெட்கினோடு அவருக்கு காதல் மலருகிறது. 1880ல் ஓசிப் நாடு கடத்தப்படுவதால் அவருடன் ஆஸ்திரியா சென்று பின் 1882ல் பாரிஸ் சென்று இணைந்து வாழ்கின்றனர். அங்கு அவர்களுக்கு இரு மகன்கள் பிறக்கின்றனர். பாரிசில் மார்க்சின் மகள் லாரா லபார்க்குடன் இருவரும் இணைந்து செயல்படுகின்றனர். 7வருடங்களில் காசநோய் காரணமாக ஓசிப் இறந்துவிடுகிறார்.

அதற்குபின் கிளாராவுடைய அரசியல்பணி மேலும் தீவிரமடைகிறது. எங்கெல்சின் முன்முயற்சியால் இரண்டாம் அகிலத்தின் துவக்க பேரவை 1889 ஜூலை14ல் பாரிசில் நடைபெற்றது. அதன் அமைப்பாளர்களில் கிளாராவும் ஒருவர். 1890ல் சோசலிஸ்டுகள் மீதான தடை நீக்கப்படுவதால் ஜெர்மனி திரும்பும் கிளாரா கட்சி பணிகளிலும் தொழிற்சங்கங்களில் உழைக்கும் பெண்களை அமைப்பாக்கும் பணியிலும் ஈடுபடுகிறார். 1892ல் கிளாராவை ஆசிரியராக கொண்டு பெண்களுக்கான ‘சமத்துவம்’ பத்திரிகை துவங்கப்படுகிறது.

1896ல் இரண்டாவது அகிலத்தின் நான்காவது மாநாடு லண்டனில் நடைபெற்ற பொழுது 30 பெண் சோசலிஸ்டுகள் பங்கேற்ற அதிகாரபூர்வமற்ற ஒரு தனி பெண்கள் மாநாடும் அங்கேயே கிளாரா தலைமையில் நடத்தப்பட்டது. அதில், உலகப் பெண்கள் இயக்கத்திற்கான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தத்துவார்த்த விவாதம் நடைபெற்றது. அதாவது, முதலாளித்துவ பெண்ணியத்திற்கும், பாட்டாளி வர்க்கப் பெண்கள் இயக்கத்திற்கும் இடையிலான உறவு குறித்து அம்மாநாடு ஆய்வு செய்தது. வர்க்கநலனில் வேறுபடும் இவ்விரு இயக்கத்தையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும் என்ற கருத்து ஏற்கப்பட்டு, உழைக்கும் பெண்களை வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடுத்தும் வகையிலான சோசலிசப் பிரச்சாரப் பணிகளை தீவிரப்படுத்துவதில் கவனத்தை குவிக்க வேண்டும் என்று முக்கிய முடிவெடுக்கப்பட்டது.

ஏன் இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டது? முதலாளித்துவ பெண்ணியம் என்பது என்ன? அதற்கும் பாட்டாளி வர்க்க பெண்கள் இயக்கத்திற்குமான வேறுபாடு என்ன?

     இங்கிலாந்தில் 1750ல் இருந்து 1850 காலகட்டத்தில் தொழிற்புரட்சி ஏற்பட்டு புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1825ம் ஆண்டு நீராவி இஞ்சின்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் அதுவரை கைகளால் மட்டுமே செய்து வந்த பொருளுற்பத்தி முறை பெரும் மாற்றத்தைக் கண்டது. உற்பத்தி பெரிய தொழிற்சாலைகள் மூலம் செய்வதான புதிய முறை தோன்றியது. இதன்காரணமாக, முதலாளிகள் பாட்டாளிகள் என்ற வர்க்க பிரிவு சமூகத்தில் உருவானது.

இந்த தொழிற்துறை முதலாளிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பதற்காக ‘சுதந்திர சந்தை’ என்ற கோரிக்கையை எழுப்பினர். சுதந்திர சந்தைக்கு எதிராக இருந்துவந்த நிலவுடமை சட்டங்கள் அவர்களுக்கு பெருந்தொல்லையாக இருந்தன. தங்களுக்கு ஆதரவான சட்டங்களை இயற்றுவதற்கு தேவையான அரசியல் அதிகாரம் அவர்களிடம் இல்லாததால் நிலவுடமையை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற வேண்டியிருந்தது. எனவே, மன்னராட்சியை எதிர்த்து குடியரசு வேண்டும் என முதலாளிகள் ஒருபுறம் போராடினார்கள். மறுபுறம், கொடுமையான வரிகளை விதித்து வாழ்க்கையை நாசமாக்கிய மன்னராட்சியை எதிர்த்து உழைக்கும் மக்களும் போராடினர்கள்.

இங்கிலாந்தில் மட்டுமல்லாமல் அன்றைக்கு முதலாளித்துவம் வளர்ந்து கொண்டிருந்த எல்லா நாடுகளின் நிலைமையும் இவ்வாறுதான் இருந்தது. புதிய வர்க்கமாக தோற்றம் பெற்ற பாட்டாளிகள் அதிலும், குறைந்த கூலிக்காக ஆலைகளில் பணியமர்த்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிலைமை மிகவும் துன்பகரமாக இருந்தது. 16முதல் 18மணி நேர வேலை. குறைந்த கூலி. மோசமான தங்குமிடம். இரவு பணி. மகப்பேறு விடுப்பு கிடையாது என அல்லல்பட்டனர். தொழிற்புரட்சியின் தொடக்க நாட்களில் பெண்களும் குழந்தைகளும் நிலக்கரி சுரங்கங்களில் கூட வேலைக்கு அமர்த்தப்பட்டு கடுமையான சுரண்டலுக்கு ஆளானார்கள். நிலக்கரி கூடைகளை முதுகுகளில் சுமந்து சென்றபோது அவர்களுடைய கால்களும் முதுகும் வளைந்து போய்த் துன்புற்றனர்.

     திருமணமான பெண்கள் தங்கள் வீட்டு ஆண்களின் வருமானம் போதாததால் ஆலைகளுக்கு வந்தனர். ஜவுளி ஆலைகளில் பணிபுரிந்த பெண் தொழிலாளர்களின் 30 சதம் குழந்தைகள் கருவிலேயே அழிந்து போயினர். 50சதம் குழந்தைகள் மட்டுமே ஐந்து வயதை எட்டினர். வேலை போய்விடும் என்ற அச்சத்தால் தாய்மார்கள் குழந்தை பிறந்த மூன்று வாரங்களில் வேலைக்குத் திரும்பினர். வீட்டில் விட்டு வரப்பட்ட குழந்தைகள் அமைதியாக தூங்குவதற்கு அபினி கொடுக்கப்பட்டது.

போதிய வெளிச்சம் காற்று இல்லாத நிலை, நீண்டநேர வேலை, தொடர்ந்து நின்று கொண்டே வேலை செய்வது ஆகியவை இந்தப் பெண் தொழிலாளர்களை பெரிதும் பாதித்தது. ஜவுளி ஆலைகள் மட்டுமின்றி பின்னல் வேலை, உலோக ஆலை, சணல் ஆலை, புத்தகம் கட்டும்வேலை, சங்கிலிகள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வகை தொழிற்துறையில் பெண்கள் வேலை செய்தனர்.

பாட்டாளி பெண்களின் நிலை இவ்வாறிருக்க மத்தியதர, உயர் வர்க்க பெண்கள் தங்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, சொத்து, சமஊதியம், வாக்குரிமை, நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் போன்றவற்றுக்காக கோரிக்கைகளை முன்வைக்க துவங்கியிருந்தனர். அவர்கள்  ஆண்களையே தங்கள் எதிரிகளாக கருதினர். அதற்கான வகையில் கருத்துகளை முன்வைத்தனர். இவ்வாறு ஆண்களை எதிர்க்க உருவானதே பெண்ணியம் என்பதாகும். அதாவது, முதலாளித்துவ வர்க்க சமூகத்தின் கட்டமைப்புக்குள்ளாகவே ஆணுக்கு சமமான உரிமை பெறுவதற்கான கோரிக்கைகளை மட்டும் அவர்கள் முன்வைத்தனர். முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவோ துன்பத்தில் உழன்ற பாட்டாளி வர்க்க பெண்களுக்கு ஆதரவாகவோ அவர்கள் எதுவும் பேசவில்லை. தங்களுடைய நலனை மட்டும் பெண்ணியவாதிகள் முன்னிருத்தினர்.

பெண் தொழிலாளர்களுக்காக தொழிற்சங்கங்கள் மட்டுமே போராடி வந்தன. தொழிற்சாலைகள் பெண்களுக்கு வேலை தருவதால் தங்களுடைய வேலை பறிபோகிறது என்பதால் பெண்களின் வேலையை தடைசெய்ய சட்டம் வேண்டும் என ஆண் தொழிலாளர்கள் கோரினார்கள். ஆனால், மார்க்ஸ் வழிகாட்டுதலின் கீழ் 1864ல் இருந்து செயல்பட்டுவந்த சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் ஜெனீவா காங்கிரஸ் 1866ம் ஆண்டு இக்கோரிக்கையை கடுமையாக எதிர்த்தது.

ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு குறைந்த கூலி வழங்குவதன் மூலம் முதலாளிகள் தங்கள் இலாபத்தை அதிகரிக்கின்றனர். இதை உணராமல் பெண்களைப் போட்டியாளர்களாக ஆண்கள் கருதக்கூடாது. பெண்களுக்கு வேலை கொடுக்க கூடாது என சட்டம் இயற்றப்படுவது ஆண்களின் கூலியை உயர்த்தாது. ஏனென்றால், பெண்களின் மலிவான உழைப்பிற்கு பதிலாக முதலாளிகள் இயந்திரத்தை மேம்படுத்தி இலாபம் பெறுவார்கள். நவீன இயந்திரங்களால் ஆண்களுக்கு வேலை பறிபோகும் நிலையே வரும். அதனால் பெண்கள் குறைந்த கூலி வேலை பெறுவதை தடுக்க ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான கூலி கோரிக்கையைதான் பாட்டாளிவர்க்கம் முன்வைக்க வேண்டும் என மார்க்ஸ் வழிகாட்டினார். பெண்களை மீண்டும் வீட்டில் அடைப்பதை தடுத்ததோடு பெண்களுக்கான சமகூலி கோரிக்கையும் மார்க்சின் சிந்தனையால் உறுதிப்படுத்தப்பட்டது.

மார்க்சின் மறைவிற்கு பின்பு எங்கெல்சின் வழிகாட்டுதலில் அமைக்கப்பட்ட இரண்டாம் அகிலம் 1897ல் சுவிட்சார்லாந்தில் நடத்திய சர்வதேசிய காங்கிரசில் அனைத்து நாடுகளின் தொழிற்சங்கங்களும் கூடின. அப்போது உழைக்கும் மகளிரின் பாதுகாப்பிற்கான தனிப்பட்ட பிரச்சாரங்கள் மேற்கொள்வதென முடிவானது.

அதன் கோரிக்கைகள்:

Ø  அனைத்து தொழிற்துறையின் பெண்களுக்கும் சிறப்பான மருத்துவவசதி மற்றும் பாதுகாப்பு சட்டபூர்வமாக வழங்கப்பட வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்தாத முதலாளிகள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்த திறன் வாய்ந்த தொழிற்சாலை ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்.

Ø  பெண் தொழிலாளர்களின் வேலை நேரம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத்திற்கு மேலாக இருக்க கூடாது. சனிக்கிழமைகளில் மதியமே விடுப்பு வழங்கிட வேண்டும்.

Ø  கர்ப்பிணிப் பெண்கள் பேறுகாலத்திற்கு முன்பும் பின்புமான இரண்டு மாதங்களில் நேரடியான உற்பத்தி(தயாரிப்பு) வேலைகளில் ஈடுபடுத்தக் கூடாது. குழந்தை பிறந்த பின்னர் குறைந்த பட்சம் ஆறுவார விடுப்பு வழங்கவேண்டும். கர்ப்பிணிப் பெண்களை பணியமர்த்தக் கூடாத தொழிற்துறைகளை சட்டரீதியாக பட்டியலிட வேண்டும். சம்பளத்துடன் கூடிய பேறுகால விடுப்பு வழங்கப்படவேண்டும்.

Ø  பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புச் சட்டங்கள் கிராமப்புற பெண் தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.

Ø  ஆண் பெண் இருவருக்கும் சமகூலி வழங்கப்பட வேண்டும்.

Ø  பாராளுமன்றத்தில் உள்ள தொழிலாளர் பிரதிநிதிகள் இதற்கான சட்டங்களை நிறைவேற்ற கோருவார்கள்.

Ø  இதற்கான போராட்டங்களில் ஆண் தொழிலாளர்களுடன் உழைக்கும் மகளிரும் தோளோடு தோள் நிற்பார்கள்.

இதன்பின் உலகமெங்கும் உள்ள தொழிற்சங்கங்கள் பெண்களுக்கான இந்த கோரிக்கைகளை முன்னெடுத்தன. ஆனால், உழைக்கும் பெண்களுக்கான இந்த தனிப்பட்ட கோரிக்கைகள் தங்களுக்கும் பலனளித்த போதிலும் முதலாளித்துவ பெண்ணியவாதிகள் இவற்றைக் கண்டுக் கொள்ளவே இல்லை. அதேபோல் வர்க்கங்கள் இருப்பதையோ முதலாளி தொழிலாளி வர்க்க போராட்டத்தை பற்றியோ பேசவில்லை.

சோசலிசத்தில் நம்பிக்கை வைத்திருந்த பெண்கள்தான் உழைக்கும் பெண்களின் கோரிக்கைகளை சிறப்பாக முன்னெடுத்தனர். குறிப்பாக ஜெர்மனியில் இருந்த சமூக ஜனநாயக கட்சி பெண்கள் தனிச்சிறப்பான முறையில் மற்றவர்களை வழிநடத்தினார்கள். அதில் கிளாரா முதன்மையானவராக இருந்தார். முதலாளித்துவ பெண்ணியவாதிகள், பெண்ணினம் ஆண்களை போலவே சமஉரிமைகள் கொண்டவர்கள் என்பதற்கான கோரிக்கைகளை முன்வைத்ததை அதன் சிறப்பை கிளாரா மறுக்கவில்லை, அவை உழைக்கும் வர்க்க பெண்களுக்கும் மதிப்புமிக்கவை என்பதையும் ஏற்றார். இருப்பினும் அந்த சீர்திருத்தங்கள் ஒரு எல்லைக்குட்பட்டவை என்பதையும் அவை பெருமளவிற்கு சொத்துபடைத்த பெண்களுக்கே நன்மையளித்தையும் கிளாரா சுட்டிக்காட்டினார்.

 

பாட்டாளி வர்க்க பெண்கள் இயக்கத்தின் குறிக்கோள் என்ன?

ü  தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் முதலாளித்துவ வர்க்கத்தை வீழ்த்தி சுரண்டலற்ற ஒரு புதிய சமத்துவ சமூகம் அமைத்தலே அதன் குறிக்கோள்.

ü  அதற்காக சக ஆண்களுடன் இணைந்து போராடுதல்.

ü  8மணி நேர வேலை, சமகூலி, மகப்பேறு விடுப்பு, வாக்குரிமை போன்ற உடனடி கோரிக்கைக்காக போராடுதல்.

ü  உற்பத்தி முறை மாற்றியமைக்கப்பட்ட சோசலிச சமூகத்தில் மட்டுமே பெண்கள் உண்மையில் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் பெற முடியும் என்பதற்கான பிரச்சாரத்தை முன்னெடுத்தல்.

உழைக்கும் பெண்களுக்கான இந்த கோரிக்கைகளை செயல்படுத்த 1900ஆம் ஆண்டில் இருந்து ஜெர்மனியில் மகளிர் மாநாடுகளை கிளாரா முறையாக நடத்தி வந்தார். 1907இல் ‘சர்வதேச சோசலிஸ்ட் பெண்கள் முதல் மாநாடு ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் கிளாரா தலைமையில் நடைபெற்றது. 15 நாடுகளைச் சார்ந்த 59பெண்கள் அதில் பங்கேற்றனர். அம்மாநாட்டில் அனைத்து பெண்களுக்குமான வாக்குரிமைக்காக போராட்டம் நடத்தவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதலாளித்துவ பெண்களால் நடத்தப்பட்டு வந்த வாக்குரிமைக்கான இயக்கம்(Suffrage Movement) சொத்து வைத்திருக்கும் பெண்களுக்கான வாக்குரிமைக்காக மட்டுமே போராடி வந்தது. அதனால் அந்த இயக்கத்தோடு தொடர்பிலிருந்த நாடுகளில் இருந்து வந்திருந்த மாநாட்டு பிரதிநிதிகள் தகுதி அடிப்படையில் மட்டுமே வாக்குரிமை தரப்படவேண்டும் என வாதாடினர். மாநாட்டு தீர்மானத்தை எதிர்த்தனர். இறுதியில், உழைக்கும் பெண்களுக்கான வாக்குரிமைக்கான போராட்டத்தை வர்க்கப்போராட்டத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது என உறுதியாக போராடிய சோசலிஸ்ட் பெண்களே அதற்கான வோட்டெடுப்பில் வென்று தகுதி அடிப்படையிலான வாக்குரிமை என்ற முதலாளித்துவ பெண்ணியக் கருத்தை முறியடித்தனர்.

1910ல் கோபன்ஹேகனில் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் மகளிர் தினம் அனுசரிப்பதற்கான தீர்மானம் கிளாராவால் முன்மொழியப்பட்டு ஏற்கப்பட்டது. அதோடு 8மணி நேர வேலை, சமகூலி, மகப்பேறு விடுப்புக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை பிரச்சார இயக்கமாக கொண்டு செல்லப்பட்டது.

ஜெர்மனியில் உழைக்கும் பெண்கள் இயக்கத்தையும் சர்வதேச அளவில் சோசலிஸ்ட் பெண்கள் அமைப்பையும் இணைத்து கிளாரா செயல்பட்டு வந்த அதேகாலகட்டத்தில் ரஷ்யாவில் உழைக்கும் பெண்களை ஒருங்கிணைப்பதற்கான தனது அறிவார்ந்த பணியைத் துவக்கியிருந்தார் குருப்ஸ்கயா.


1896ல் கிளாரா தலைமையில் நடைபெற்ற சோசலிச பெண்கள் மாநாட்டில் முதலாளித்துவ பெண்ணியத்திற்கும் பாட்டாளி வர்க்க பெண்கள் இயக்கத்திற்குமான வேறுபாடுகள் தெளிவாக வரையறை செய்யப்பட்ட அதே 1896ஆம் ஆண்டில்தான் ஜார் அரசால் கைது செய்யப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் குருப்ஸ்கயா.

1869ஆம் ஆண்டு ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் பிறந்த குருப்ஸ்கயா தனது 25வது வயதில் மார்க்சிய விவாதக் குழு ஒன்றில் லெனினை சந்தித்தார். கைது செய்யப்பட்டு லெனினோடு மூன்றாண்டுகள் உள்நாட்டு சிறைத் தண்டனையை அனுபவித்த போதுதான் குருப்ஸ்கயா  ‘உழைக்கும் மகளிர்’ எனும் நூலை எழுத துவங்கினார். 1899ல் எழுதி முடிக்கப்பட்ட அந்த சிறுநூல் ரஷ்ய பெண்களின் நிலை குறித்து வெளியான முதல் மார்க்சியப் படைப்பாகும். ஜாரிசத்தின் கீழ் பெண்கள் உரிமையற்று இருந்த நிலையை அப்படைப்பு மிகவும் ஆழமாக ஆய்வு செய்தது.

“விவசாய பெண்கள் ஆண்களுக்கு நிகராக உழவு, நடவு, கோழிப் பண்ணையை பராமரிப்பது, கால்நடைப் பராமரிப்பு, வீட்டு வேலை, துணி நெய்தல், குழந்தை வளர்ப்பு பணியை செய்கின்றனர்.  பணக்கார விவசாயியிடம் கடன்வாங்கி திருப்பி செலுத்த முடியாத நிலைமைகளில் நிரந்தர கடனாளியாகும் விவசாய கணவனோ தன் குடும்பத்தை காக்க வேண்டி கூலித் தொழிலாளியாகும் நிலை ஏற்படுகிறது. கணவனோடு வேலை தேடி நடந்தே மற்ற மாகாணங்களுக்கு பெண்ணும் குழந்தைகளும் செல்ல வேண்டியிருக்கிறது. இவ்வாறு செல்லும் விவசாய குடும்பங்கள் ஏதாவது ஒரு வேலை கிடைக்கும் வரை பிச்சையெடுத்தபடியே உயிர் பிழைத்து ஊர் ஊராக செல்கின்றனர்.

குடிசைத் தொழில்களான நெசவு, தொப்பி செய்தல், பின்னுதல், தோல் பதனிடுதல், மட்பாண்டம் செய்தல், விளக்கு தயாரித்தல், தேக்கரண்டிகள், பூட்டுகள் செய்பவர்கள் நிலைமையும் துன்பகரமானதுதான். எட்டு வயதில் இருந்து குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்யத் தொடங்குகிறார்கள். தயாரிக்கும் பொருட்களின் பெரும் பகுதியை தரகர்களிடம் விற்கிறார்கள். வருமானம் சொற்பமானது. ஒவ்வொரு குடும்பமும் 18மணி நேரம் உழைக்கிறது.

நகரத்தின் பருத்தியாலைகளில் ஆண்களை காட்டிலும் பெண்களே அதிகம் பணிபுரிகின்றனர். ஆனால் கூலி மிகவும் குறைவாக இருப்பதால் அதைக் கொண்டு குடும்பம் வாழ முடியாது. பெண்ணின் வருமானம் ஒரு கூடுதல் வருவாயாகவே பயன்படுகிறது. நகரில் ஒரு பெண் தனித்து வாழ்கிறாள் என்றால் உழைப்பு சக்தியை மட்டுமின்றி தன்னையே விற்கும் நிலைக்கு இதனால் ஆளாகிறாள்.

 ஆணைப் போலவே ஓய்வின்றி உழைத்து ஏழ்மையில் வாடும் உழைக்கும் மகளிரும் பாட்டாளி வர்க்கத்தின் அங்கமே. ஆகவே அவளுடைய நலனும் பாட்டாளி வர்க்க நலனோடு தொடர்புடையது.” என அனைத்து உழைக்கும் வர்க்க பெண்களின் துன்பங்களை தனது நூலில் எளிமையாக விளக்குகிறார் குருப்ஸ்கயா.

அதோடு, பாட்டாளி வர்க்க நலன் என்றால் என்ன? என கேள்வி எழுப்பி மிக எளிமையாக அதற்கு பதிலளித்து பெண்களை எழுச்சியுறச் செய்கிறார்.

“தொழிலாளர்களின் உழைப்பு தான் அனைத்து செல்வங்களையும் தோற்றுவிக்கிறது. இருப்பினும் அந்த உழைப்பிற்கு ஈடாக அவர்கள் வாழ்வதற்கும் உழைப்பதற்கும் கூட தேவையான உணவு கிடைப்பதில்லை. அனைத்து சட்டங்களும் சொத்துடைமை வர்க்கத்திற்கு சேவை செய்யவே வகுக்கப்பட்டுள்ளது. நாட்டின் சட்ட திட்டங்களை வகுப்பதில் நிர்வாகத்தில் பெண்களுக்கு எந்த பங்கும் இல்லை. உழைப்பது ஒன்றே அவர்கள் வேலை. வரிகள் கட்ட அவர்கள் ஓயாது உழைக்க வேண்டும்.

     இந்த நிலையை தொழிலாளர்கள் மாற்ற நினைக்கின்றனர். இனியும் அவர்களுக்கு வர்க்கங்கள் வேண்டாம். ஏழை, பணக்காரன் வேற்றுமை இருக்க கூடாது. ஆலைகள், நிலங்கள், தொழிற்சாலைகள், பட்டறைகள், சுரங்கங்கள் தனியாரின் உடைமையாக இன்றி ஒட்டுமொத்த சமூகத்தின் உடமையாக இருக்க வேண்டும்.

உழைப்பு சக்தியைச் சுரண்டி பிழைக்கும் முதலாளிகளுக்கு எதிராக பெண்களும் ஆண்களோடு இணைந்து போராட வேண்டும். வேலை நிறுத்தங்களின் போது ஆண்களின் வேலைகளை செய்யத் தயார் என்று பெண்கள் அறிவித்தால், வேலை நிறுத்தம் தோல்வியே அடையும். எனவே பெண்களை அணிதிரட்டுவது மிக அவசியமாகும் என எச்சரிக்கிறார் குருப்ஸ்கயா.

இந்தக் கருத்துகள் அனைத்தும் அமைப்புரீதியாக சோவியத்துகளுக்கு கொண்டு செல்லப்பட்டன. மக்களுக்கு புரியும் வகையில் விளக்கப்பட்டன. ரஷ்ய பெண்கள் இயக்கமும் இக்கருத்துக்களை பெண்களிடம் கொண்டு சென்றது.

1902ல் உருவாக்கப்பட்ட ரஷ்ய சமூக ஜனநாயக கட்சிக்கான வரைவு திட்டத்தில் பெண்களின் உடல்நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் துறைகளில் உழைப்பை தடை செய்தல், பெண்கள் அதிகமாக பணிபுரியும் தொழிலகங்களில் பெண் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இடம்பெற்றன.

1907க்கு பிறகு ஆண்டுதோறும் மகளிர் தின நிகழ்வை அனுசரித்தல் உட்பட பல வழிகளில் பெண்களுக்கான போராட்டங்கள் ரஷ்யாவில் கட்டியமைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக 1917 மார்ச் 8 மகளிர் தினத்தன்று ரஷ்ய பெண்கள் ‘ரொட்டி வேண்டும்! போர் நிறுத்தம் வேண்டும்!’ என முழக்கமிட்டு தொடங்கிய போராட்டம் ஜார் மன்னராட்சியை வீழ்த்தியது. அதன்பின் கெரன்கிஸ்கி என்பவர் தலைமையில் பொறுப்பேற்ற முதலாளித்துவ அரசும் போர்நிறுத்தம் போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் அதை எதிர்த்து போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளிகளை வீழ்த்தி தொழிலாளர்கள் அரசு அதிகாரத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என அறைகூவல் விடுத்தது. 1917 நவம்பரில் அதற்கான புரட்சி நடைபெற்று தொழிலாளர்கள் தலைமையிலான உலகின் முதல் சோசலிச அரசு ரஷ்யாவில் அமைந்தது.

மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட முதலாளித்துவம் வளர்ச்சியடையாத ரஷ்ய நாட்டில் 1917ல் ஜார் மன்னராட்சியை வீழ்த்திய பிப்ரவரி புரட்சியும் அதன்பின்பு 1917 நவம்பரில் முதலாளித்துவ ஆட்சியை தூக்கி எறிந்த சோசலிச புரட்சியும் வெற்றிபெற்றது. அதற்கான காரணம் என்ன?

1917-ஆம் ஆண்டு பிப்ரவரி புரட்சியில் தோன்றிய அரசு, முதலாளித்துவத் தன்மை கொண்டதாக இருப்பதனால், கொள்ளைக்கார ஏகாதிபத்தியப் போரைத் தொடர்வதால் நாம் அதனை ஆதரிக்க கூடாது என்றார் லெனின். அதோடு, தொழிலாளர்கள், வீரர்கள் மற்றும் விவசாயிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சபைகளான ‘சோவியத்’ என்ற அமைப்பு ரஷ்யாவின் தனித்தன்மையாக இருந்தது. எனவே, அந்த தொழிலாளர் பிரதிநிதிகளின் சோவியத்துகள்தான் புரட்சிகர அரசாங்கத்தின் சாத்தியமான ஒரேயொரு வடிவம் என்பதை மக்கள் திரள் புரிந்து கொள்ளும்படி நாம் செய்ய வேண்டும். நாடாளுமன்ற குடியரசு வேண்டாம் சோவியத்துகளின் குடியரசு வேண்டும் என்று கூறினார். மேற்சொன்னவை 1917ல் லெனினால் எழுதப்பட்ட ஏப்ரல் ஆய்வுரைகளின் இரு முக்கிய அம்சங்களாகும்.  

1912ம் ஆண்டு பாஸ்லேயில் நடைபெற்ற இரண்டாவது அகிலத்தின் சர்வதேச காங்கிரஸ் உலகின் போர்மூளும் சூழலையும் ஏகாதிபத்திய போரை எதிர்கொள்வதை பற்றியும் போருக்கு முன்னதாகவே விவாதித்து முடிவெடுத்திருந்தது. போரை ஆதரிக்க கூடாது என இரண்டாம் அகிலத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை அகிலத்தின் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் 1914ல் போர் ஆரம்பித்தவுடன் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் சோசலிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பாட்டாளி வர்க்க நலனை கைவிட்டு தங்கள் சொந்த நாட்டு ஆளும் வர்க்கத்தை ஆதரித்தனர். ஜெர்மனியின் சமூக ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ செலவினங்களுக்கான பட்ஜெட்டிற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்து தங்கள் நாட்டின் முதலாளித்துவ அரசை ஆதரித்தனர். இதைக் கண்டு கோபமுற்ற கிளாரா தனது கட்சியின் நிலைபாட்டை கடுமையாக எதிர்த்தார்.

அதேசமயத்தில் ஏகாதிபத்திய போரை எதிர்த்து லெனின் மேற்கொண்ட வரலாற்று பாத்திரத்தை பற்றி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவராக விளங்கிய அலெக்சாண்ரா கொலந்தாய் “இரத்தம் சிந்திக் கொண்டிருந்த அந்தக் குழப்பங்களிடையில் தெளிவாக பாதையைக் சுட்டிக் காட்டி நின்ற ஒரு மாபெரும் மனிதரின் அச்சமற்ற உருவம் மேலெழும்பிக் கொண்டிருந்தது” என தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

ஏகாதிபத்திய நாடுகள் சந்தையை பிடிப்பதற்காக இந்த போர் நடத்தப்படுகிறது. இது மக்களின் நல்வாழ்விற்கான போர் அல்ல. இந்த போரை நாம் ஆதரிக்க கூடாது. ஆனால் இந்த சூழலை பயன்படுத்தி உள்நாட்டு யுத்தம் மூலம் ஜார் மன்னரை வீழ்த்த வேண்டும் என தெளிவாக வழிகாட்டியவர்  லெனின் ஒருவரே. அதனடிப்படையில் தான் போர் வேண்டாம், ரொட்டி வேண்டும் என்ற எளிய முழுக்கங்கள் மூலம் போல்ஷ்விக் கட்சி உழைக்கும் மக்களை திரட்டியது. ஆனால் ஜெர்மானிய சமூக ஜனநாயக கட்சி செய்த தவறால் அங்கு பாசிசம் வளர வழி ஏற்பட்டது என கிளாரா கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கிளாராவோடு இணைந்து சமூக ஜனநாயக கட்சியின் திருத்தல்வாதத்தை கடுமையாக எதிர்த்தவர் ரோசா லக்சம்பர்க்.


1871ல் போலந்தில் பிறந்த ரோசா லக்சம்பர்க் 1886ல் போலந்தின் இடதுசாரி பாட்டாளிக் கட்சியில் (Proletariat party) சேர்ந்தார். 1905 ரஷ்ய புரட்சிக்கு பிறகு போல்ஷ்விக்குகளுடனும் லெனினுடனும் நெருக்கமாக இருந்தார். சீர்திருத்தவாத அபாயங்களை லெனினுக்கு முன்பாகவே உணர்ந்திருந்த புரட்சியாளராக ரோசா இருந்தார். மார்க்சிய பொருளாதார கோட்பாடுகளை விளக்கும் A contribution To An Explanation of Imperialism என்ற நூலை எழுதியவர். ஜெர்மன் சமூக ஜனநாயக கட்சி ராணுவ பட்ஜெட்டை அங்கீகரித்ததை ரோசாவும் கடுமையாக எதிர்த்தார். 1916 முதல் 1918 வரை அவர் பெர்லின், வ்ரோன்கி(Wronke) மற்றும் பிரெஸ்லாவ்(Breslau) சிறைகளில் மாற்றிமாற்றி அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டார். சிறையில் அவர் எழுதிய ஜெர்மன் சமூக ஜனநாயகத்தில் நெருக்கடி (The Junious Pamplet) முதல் உலக யுத்தத்தின் பயங்கரத்தை மட்டுமல்லாமல் ஒவ்வொரு ஏகாதிபத்திய யுத்தத்தின் கொடுரத்தையும் விரிவாக எடுத்துரைத்துள்ளது. சமூக சீர்திருத்தங்கள் மூலமாக படிப்படியாக சோசலிசத்தை அடைவது என்ற கோட்பாட்டை மறுத்து புரட்சியின் மூலம் சோசலிசம் என்பதை தனது எழுத்துகளில் வலிமையாக முன்வைத்தவர் ரோசா லக்சம்பர்க்.

ஆகவேதான் மார்க்சிய கோட்பாட்டை நடைமுறைபடுத்திய ரஷ்ய மக்களின் புரட்சியை சாதனையை ரோசா போற்றி கொண்டாடினார். 1917 ரஷ்ய புரட்சி வெடித்த போது சிறையிலிருந்த அவர் ’ரஷ்ய புரட்சி’ எனும் நூலை எழுத தொடங்கினார். ஆனால் அது முடிக்கப்படவில்லை. 1918 நவம்பரில் சிறையிலிருந்து விடுதலையான ரோசா தொடர்ந்து புரட்சிகர பணிகளில் ஈடுபட்டார். 1919 ஜனவரி 15ல் ரோசா மற்றும் லீப்னெக்ட் இருவரும் பெர்லினில் பிரீகோர்ப்ஸ் என்ற வலதுசாரி துணை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள். ரோசா துப்பாக்கியால் அடித்துக் காயப்படுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டு கால்வாயில் தூக்கியெறியப்பட்டார். புரட்சிக்காக தனது இன்னுயிரை தந்தார் ரோசா லக்சம்பர்க்.

ரஷ்ய சோசலிச புரட்சியின் வெற்றிக்குபின் கம்யூனிஸ்ட் அகிலம் எனப்படும் மூன்றாவது அகிலம் லெனின் தலைமையில் அமைக்கப்பட்டது. 1921ல் சர்வதேச கம்யூனிஸ்ட் மகளிர் இயக்கத்தின் முதல் மாநாடும் மாஸ்கோவில் நடைபெற்றது. 16 நாடுகளில் இருந்து 20 பெண் பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர். முதலாளித்துவ தனிச்சொத்து தான் பாலின மற்றும் வர்க்க அடிமைத்தனத்திற்கான இறுதிக் காரணம். அதனால் தனியுடமையை ஒழித்து பொதுவுடமை வருவதால் மட்டுமே பெண்ணின் முழு விடுதலை சாத்தியம் என்பதற்கான கோட்பாடு மாநாட்டில் உறுதிசெய்யப்பட்டது.

     சோசலிச ரஷ்யாவில் சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்புதில் குருப்ஸ்கயாவும் அலெச்சாண்ட்ரா கொலந்தாயும் பெறும் பங்காற்றினர். சோவியத் ஒன்றியத்தின் துணைக் கல்வியமைச்சராக குருப்ஸ்கயா செயலாற்றினார். கொலந்தாய் ரஷ்ய அரசாங்கத்தின் அமைச்சரவையில் சமூக நலத்துறையின் முதல் பெண் அமைச்சரானார். அதோடு உலகின் முதல் வெளிநாட்டு தூதராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர் கொலந்தாய்.

 

பெண்கள் சமத்துவத்திற்காக குருப்ஸ்கயா, கொலந்தாய் வகுத்தளித்த கொள்கைகள் செயல்பாடுகளை பார்ப்போம்.

1)டிசம்பர் 1917ல் விவாகரத்துக்கான சட்டம் – கணவன் மனைவி இருவரின் ஒப்புதலோடு ஓரிரு வாரங்களில் விவாகரத்து பெரும்படியான சட்டம்.

2)பொதுச் சமையலறை, பொதுச் சலவை நிலையம் - முதலாளித்துவம் பெண்ணின் வீட்டு வேலையை குறைக்காமலே அவர் மீது தாங்க முடியாத பாரத்தை சுமத்தியிருக்கிறது. உழைக்கும் பெண்ணின் மேல் சுமத்தப்பட்டிருந்த வீட்டு வேலைகள் கம்யூனிச சமூகத்தால் பகிர்ந்துக் கொள்ளப்படுதல்.

3)பிரசவகால விடுப்பு – கிரெஷ் – தாய்பாலுட்டுவதற்கான ஏற்பாடுகள்

அ) பச்சிளங் குழந்தைகள் பராமரிப்பு – தொழிற்கூடங்களுக்கு அருகில் தாய்சேய் நல விடுதிகள் மழலையர் காப்பகங்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழந்தையின் பிறப்பையும் கம்யூனிச சமூகம் மகிழ்ச்சியோடு கொண்டாடுகிறது.

ஆ) குழந்தைகளை வளர்தெடுத்தல் – அதற்கான மழலையர் பள்ளிகள்

மண்ணை தோண்டுவது, செடிகள் நடுவது, தண்ணீர் ஊற்றுவது, சமையலறையில் காய்கறிகள் கழுவுவது, பாத்திரங்கள் தேய்ப்பது, தையல், ஓவியம், பாடல், வாசிப்பு, விளையாட்டு, சுத்தமாக இருப்பது, உழைப்பது, நண்பர்களுடன் சண்டை போடாமல் அழுது அடம் பிடிக்காமல் பொருள்களை பகிர்ந்துக் கொள்வது ஆகியவை கற்பிக்கப்பட்டன.

குழந்தைக்கு உணவளிப்பது தூங்க வைப்பது கற்பித்தல் ஆசிரியரின் பணியாகும். கல்வி அளிக்கும் கடமையை பெற்றோரிடம் இருந்து அரசே எடுத்துக் கொள்கிறதே ஒழிய, பெற்றோர் என்ற விதத்தில் அவர்கள் பெற்றுள்ள மகிழ்ச்சியை அல்ல. குழந்தைகளை அறிவுக் கூர்மையும் உடல்நலமும் வலிமையும் கொண்ட மகிழ்ச்சி நிறைந்த இளைய சமுகமாக வளர்ப்பதையே கம்யூனிச சமூகம் விரும்புகிறது என இதனை கொலந்தாய் விளக்குகிறார்.

இன்றைக்கும் கூட குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டுமா? கூடாதா? என்பது பெண்ணின் விருப்பம் என்ற விவாதத்தை தாண்டி முதலாளித்துவ பெண்ணியவாதிகள் பேசுவதில்லை. குழந்தை காப்பகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற சட்டஉரிமைகள் அமல்படுத்தப்படாதது குறித்து முதலாளித்துவ அரசை நோக்கி கேள்விகள் எழுப்புவதில்லை. பெண்கள் மீதான சுரண்டலையோ வர்க்க போராட்டத்தையோ ஏற்பதில்லை.

இந்நிலையில், வர்க்கமற்ற சோசலிச சமூகத்தை கட்டியெழுப்ப பாதை அமைத்திட்ட கிளாரா, குருப்ஸ்கயா, கொலந்தாய், ரோசா லக்சம்பர்க் போன்றவர்களே பெண்விடுதலைக்கான பாதையை இந்த உலகிற்கு அளித்தவர்கள் என்ற உண்மையை உரத்து சொல்வது கம்யூனிஸ்டுகளின் கடைமையாகிறது. அவர்களை பாராட்டுவது போற்றுவது மட்டுமின்றி அந்த புரட்சி வீராங்கனைகள் பயணித்த மார்க்சிய பாதையில் உறுதியாக செல்வதே நாம் அவர்களுக்கு அளிக்கும் உண்மையான மரியாதையாகும்.

 

Wednesday, 3 June 2026

பெண்களின் உரிமைக் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்த கம்யூனிஸ்ட் போராளிகள்

 

சுதந்திரத்திற்கு பிறகான இந்திய நாடாளுமன்றத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்ட ரேணு சக்ரவர்த்தி, பார்வதி கிருஷ்ணன் இருவரும் பெண்கள் எதிர்கொண்ட வரதட்சணை கொடுமை, விவாகரத்து மறுப்பு, பெண்களுக்கு சொத்துரிமை, கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் காட்டப்பட்ட பாகுபாடுகள், மகப்பேறு விடுப்பு இல்லாமை மற்றும் பெண் தொழிலாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கடுமையான விவாதங்களை நாடாளுமன்றத்தில் நடத்தினர்.

அந்த வாதங்கள் பெண்களுக்கான சட்டங்களில் பல்வேறு மாற்றங்களும் திருத்தங்களும் செய்து, பெண்களின் உரிமைகளை வாழ்க்கையை பாதுகாக்க வழிவகுத்தன. சமூக உற்பத்தியில், மறுஉற்பத்தியில் பெண்கள் செலுத்திவரும் பங்களிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை நோக்கு நிலையில் இருந்து இருவரும் கருத்துகளை முன்வைத்தது வரலாற்றுச் சிறப்புடையதாகும்.

ரேணு சக்ரவர்த்தி இந்திய நாடாளுமன்றத்தில் 15ஆண்டுகள்(1952-67) உறுப்பினராக செயல்பட்டார். பெண்கள் நலனுக்கான பல்வேறு சட்டங்கள் உருவான காலகட்டம் அது. அன்றைக்கிருந்த நிலவுடமை ஆணாதிக்க கருத்தியலுக்கு எதிராக வலிமையான வாதங்களை அவர் முன்வைத்தார்.

இந்து வாரிசுரிமை சட்ட மசோதாவின்(1955) மீதான விவாதங்களில் சொத்துரிமை மற்றும் தத்தெடுப்பில் பெண்களுக்கான சமஉரிமைக்காக ரேணு சக்ரவர்த்தி முன்வைத்த வாதங்கள் அக்காலத்திய நிலவுடைமை சிந்தனைகளை குத்தி கிழித்தன. பழைய மதக் கோட்பாடுகளை நிராகரித்து நவீன காலத்தி சிந்தனையை அவர் முன்வைத்தார். பொருளாதாரத்தில் யாரையாவது சார்ந்தே பெண்கள் வாழ்ந்து வந்த அன்றைய நிலையை மாற்றியமைப்பது என்பது அவரது விவாதங்களின் மையமாக இருந்தது.

பொருளாதார சுதந்திரம் இல்லாத பெண்களுக்கு, குறிப்பாக கணவரை இழந்த பெண்களுக்கு, பராமரிப்பு (Maintenance) என்பது மிகவும் அவசியமான ஒன்று என்று வாதிட்ட அவர் சொத்துரிமை இல்லாத நிலையில், பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பராமரிப்புத் தொகை அவசியம் என்று வலியுறுத்தினார். தனது தொகுதியில் உள்ள கிராமப்புறங்களில் கணவரை இழந்த ஏராளமான பெண்கள் "வீடற்றவர்களாகவும், சொத்தற்றவர்களாகவும்" இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அவர்களுக்கு வாழ்வாதாரமோ அல்லது அடைக்கலம் கொடுக்க ஆட்களோ இல்லாத அவலநிலையை அவர் எடுத்துரைத்தார்.

  • மருமகளின் பராமரிப்பு உரிமை: கணவரை இழந்த தனது மருமகளுக்குப் பராமரிப்பு வழங்க வேண்டிய கட்டாயம் மாமனாருக்கு இல்லை என்ற அன்றைய இந்து சட்ட நிலையை அவர் விமர்சித்தார். கூட்டுக்குடும்பச் சொத்து (Coparcenary property) இருந்தால் மட்டுமே பராமரிப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை அவர் ஏற்கவில்லை. மாமனார் தனது சொத்தை மற்றவர்களுக்கு உயில் எழுதி வைத்துவிட்டால், விதவை மருமகள் பராமரிப்பின்றித் தவிக்கும் நிலை உள்ளது. எனவே, கூட்டுக்குடும்பச் சொத்து இல்லாவிட்டாலும், மருமகள்களைப் பராமரிக்கும் பொறுப்பு மாமனாருக்கு இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
  • பிரிந்து வாழும் உரிமை: பெண்கள் தங்கள் கணவருடன் வாழ முடியாத சூழல் ஏற்படும்போது, சமூகப் புறக்கணிப்பு மற்றும் குழந்தைகளின் நலன் கருதி விவாகரத்து பெறப் பெரும்பாலும் விரும்புவதில்லை என்று குறிப்பிட்ட அவர் விவாகரத்து பெறாமலேயே கணவனைப் பிரிந்து தனியாக வாழ்வதற்கும், அந்த நேரத்தில் பராமரிப்புத் தொகை (Maintenance) பெறுவதற்கும் பெண்களுக்கு உரிமை இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.
  • "ஒழுக்கமற்றவர்" (Unchaste) என்ற சொல்லுக்கு எதிர்ப்பு: பராமரிப்புத் தொகை பெறுவதற்குப் பெண்ணின் "ஒழுக்கம்" (Chastity) ஒரு நிபந்தனையாக இருப்பதை அவர் எதிர்த்தார். சமூகத்தில் ஒரு பெண் கணவனைப் பிரிந்து தனியாக வாழ்ந்தாலே அவரை இழிவுபடுத்த இந்தச் சொல் தவறாகப் பயன்படுத்தப்படுவதால், "ஒழுக்கமற்றவர்" என்ற சொல்லைச் சட்டத்திலிருந்து  நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாகத் தெளிவான வேறு சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்று யோசனை கூறினார்.

கல்வி, வேலைவாய்ப்பை பெண்கள் எளிதில் பெறஇயலாத அக்காலகட்டத்தில், கணவரை இழந்த பெண்கள் சொத்து மற்றும் பராமரிப்பு இல்லாமல் வீதியில் விடப்படுவதைத் தடுக்க சட்டபூர்வமான பாதுகாப்பு அவசியம் என்பது ரேணு சக்ரவர்த்தியின் வாதமாகும்.

அதேபோல் பெண் குழந்தைகளைத் தத்தெடுப்பதை ஒரு சமூக முன்னேற்றமாகக் கருதியதால் அவர் அதனை ஆதரித்தார். இந்து சட்டத்தில் முதல்முறையாக பெண் குழந்தைகளைத் தத்தெடுக்க அனுமதி வழங்கப்படுவதை முழுமனதுடன் வரவேற்றார்.  சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத காலத்திலேயே, பல தம்பதிகள் பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்ததை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், அத்தகைய குழந்தைகளுக்குச் சொத்தில் சட்டப்பூர்வ உரிமைகளை வழங்க உயில் (Will) எழுத வேண்டிய கட்டாயம் இருந்ததை அவர் விளக்கினார்.

  • குழந்தைகள் இருப்பவர்களுக்கும் உரிமை: ஏற்கனவே தங்களுக்கு ஆண் அல்லது பெண் குழந்தைகள் இருப்பவர்களுக்கும் கூட, மற்றொரு குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்றார்.
  • பாதுகாப்பு குறித்த அச்சங்களுக்குப் பதில்: 15 வயது பெண் குழந்தையை ஒரு ஆண் தத்தெடுக்கும்போது தவறான நோக்கங்கள் (ignoble reasons) இருக்கலாம் என எழுந்த அச்சங்களுக்குப் பதிலளித்த அவர், அத்தகைய தவறான எண்ணங்கள் ஆண் குழந்தையைத் தத்தெடுக்கும்போதும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று வாதிட்டார். எனவே, தத்தெடுப்பு கொள்கையிலேயே இத்தகைய சந்தேகங்களை எழுப்புவது சரியல்ல என்றார்.
  • பாசமே அடிப்படை: தத்தெடுப்பு என்பது சட்டக் கட்டுப்பாடுகளை விட, இயல்பான பாசப் பிணைப்புகள் மற்றும் மக்களின் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தம்பதிகள் விரும்பினால், 15 வயது வரையுள்ள ஆண் அல்லது பெண் குழந்தையைத் தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 

இந்து வாரிசுரிமைச் சட்டம் (1956) மற்றும் இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் (1956) ஆகியவற்றின் இறுதி முடிவுகளில் ரேணு சக்ரவர்த்தியின் வாதங்கள் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தின. பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு, தத்தெடுப்பு உரிமைகள் மற்றும் சொத்துரிமை ஆகியவற்றில் ஒரு சமநிலையான மற்றும் நீதியான முடிவை எடுக்க அவரின் வாதங்கள் சட்டமியற்றுபவருக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தி அதை சட்டத்திலும் பிரதிபலிக்கச் செய்தன. பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் தத்தெடுப்பு தொடர்பான அவரது முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டன, ஆனால் ஒழுக்கம் சார்ந்த சட்டச் சொற்கள் மற்றும் கூட்டுக்குடும்பச் சொத்து தொடர்பானவற்றில் அவரது கருத்துக்கள் முழுமையாக ஏற்கப்படவில்லை.

Ø  இறுதிச் சட்டத்தில் பெண் குழந்தைகளைத் தத்தெடுக்கும் உரிமை அங்கீகரிக்கப்பட்டது.

Ø  விவாகரத்து பெற விரும்பாத பெண்கள், கணவனைப் பிரிந்து தனியாக வாழும் காலத்திலும் பராமரிப்புத் தொகை (Maintenance) பெறுவதற்கான உரிமை (பிரிவு 18(2)) சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

Ø  பெண்கள் சொத்துக்களை "வரம்புக்குட்பட்ட உரிமையாளராக" (Limited owner) மட்டுமே வைத்திருக்க முடியும் என்ற நிலையை மாற்றி, அவர்களுக்கு முழுமையான உரிமையை (Absolute ownership) வழங்க வேண்டும் என்ற அவரது வாதம் ஏற்கப்பட்டு அதன்படி, பிரிவு 14-ன் கீழ் பெண்கள் தங்களுக்குக் கிடைக்கும் சொத்துக்களை முழு அதிகாரத்துடன் அனுபவிக்கும் உரிமை சட்டத்தில் சேர்க்கப்பட்டது.

Ø  தந்தையர் உயில்(Will) மூலம் மகள்களுக்குச் சொத்து கிடைக்காமல் செய்துவிடுவார்களோ என்ற அவரது அச்சம் கவனத்தில் கொள்ளப்பட்டு, அன்றைய சட்ட அமைச்சர் ஒரு முக்கியத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். தன்படி, ஒரு நபர் தனது சொத்தை உயில் மூலம் யாருக்கு வழங்கினாலும், அந்தச் சொத்திலிருந்து பராமரிப்பு பெறத் தகுதியுள்ள வாரிசுகளின் (பெண்கள் உட்பட) உரிமையைப் பறிக்க முடியாது என்ற பாதுகாப்புச் சேர்க்கப்பட்டது.

Ø  விவசாய நிலங்களில் மகள்களுக்குச் சமபங்கு வழங்குவதை மாநில அரசுகள் தடுப்பது குறித்த அவரது அச்சங்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டன. இருப்பினும், நிலச் சீர்திருத்தம் தொடர்பான மாநிலச் சட்டங்களுக்குச் சட்டத்தின் பிரிவு 4(2)-ன் கீழ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

Ø  மகன்கள் மட்டுமே பெற்றோரைப் பராமரிக்க வேண்டும் என்ற பழைய எண்ணத்தை மாற்றி, பொருளாதார வசதியுள்ள மகள்களும் தங்கள் வயதான பெற்றோரைப் பராமரிக்கும் சட்டபூர்வப் பொறுப்பை (Onus) ஏற்க வேண்டும் என்ற புதிய சமூகச் சிந்தனையை அவர் முன்வைத்தார். இது பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை கேட்கும்போது அவர்களுக்குரிய சமமான கடமையாகவும் இருக்கும் என்று அவர் கருதினார்.

Ø  "ஒழுக்கமற்றவர்"(Unchaste) என்ற நிபந்தனை அல்லது சொல் பயன்படுத்தப்படுவதை அவர் கடுமையாக எதிர்த்த போதிலும் இறுதிச் சட்டத்தில் (பிரிவு 18(3)) ஒரு மனைவி "ஒழுக்கமற்றவராக" இருந்தால் அவர் பராமரிப்பு பெறத் தகுதியற்றவர் என்ற நிபந்தனை நீடித்தது.

Ø  கூட்டுக்குடும்பச் சொத்து (Coparcenary property) இல்லாவிட்டாலும் மாமனார் தனது மருமகளைப் பராமரிக்க வேண்டும் என்று அவர் வாதிட்ட போதிலும் சட்டத்தின் பிரிவு 19(2)-ன்படி, கூட்டுக்குடும்பச் சொத்து இருந்தால் மட்டுமே மாமனார் பராமரிப்பு வழங்க வேண்டும் என்ற நிபந்தனை வைக்கப்பட்டது.


இந்து திருமண மசோதா (1955) தொடர்பான விவாதங்களிலும் ரேணு சக்ரவர்த்தி மிக கூர்மையான கருத்துக்களை முன்வைத்தார்.

திருமண மசோதாவில் ‘பெண்கள் ஆண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றிருந்த பிரிவை அவர் கடுமையாக எதிர்த்தார். பெண்களுக்குச் சமமான சொத்துரிமை இல்லாத நிலையில், அவர்கள் ஆண்களுக்கு ஜீவனாம்சம் வழங்கக் கோருவது நியாயமற்றது என்று அவர் கூறினார். "எங்களுக்குச் சமமான சொத்துரிமைச் சட்டங்களை முதலில் கொடுங்கள், அதன் பிறகு நாங்கள் ஜீவனாம்சம் வழங்கத் தயாராக இருக்கிறோம்" என்று அவர் சவால் விடுத்தார்.

அதேபோல் தாம்பத்ய உரிமைகளை மீட்டெடுத்தல் (Restitution of Conjugal Rights) என்ற சட்டப்பிரிவை அவர் "கடந்த காலத்தின் ஒரு காட்டுமிராண்டித்தனமான எச்சம்" (barbaric relic of the past) என்று விமர்சித்தார். இருவர் இணைந்து வாழ விரும்பாதபோது, அவர்களை நீதிமன்றம் மூலம் கட்டாயப்படுத்தி வாழச் சொல்வது அருவருப்பானது என்றும், அதற்குப் பதிலாக நீதிமன்ற ரீதியான பிரிவினை (judicial separation) வழங்குவதே நேர்மையான வழி என்றும் அவர் வாதிட்டார்.

திருமணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டாலும், அத்தகைய திருமணங்களின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு முழுமையான சட்டப்பூர்வ அங்கீகாரம் (legitimacy) வழங்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். பெற்றோரின் தவறுகளுக்காகக் குழந்தைகள் தண்டிக்கப்படக்கூடாது என்றும், சொத்துரிமையில் அவர்களுக்குக் காட்டப்படும் பாகுபாடுகள் களையப்பட வேண்டும் என்றும் கூறினார். குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு விஷயத்தில் தாய்மார்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

விவாகரத்து என்பது இந்து சமூகத்தை அழித்துவிடும் என்ற அச்சத்தைப் புறந்தள்ளிய அவர், ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் (மலபார், பம்பாய், மதராஸ்) விவாகரத்து நடைமுறையில் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். விவாகரத்து என்பது ஒரு கடைசி முயற்சியாகவே இருக்கும் என்றும், சமூகத்தின் ஒழுக்க விழுமியங்கள் இதனால் சிதைந்துவிடாது என்றும் அவர் கூறினார். 

பெண் தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்தவும், அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைத் தட்டிக்கேட்கவும் பல வலுவான வாதங்களை அவர் முன்வைத்தார்:

அரசியலமைப்புச் சட்டம் பாலின அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறும்போது, நடைமுறையில் இந்தியாவில் பாலின அடிப்படையில் நிலவும் ஊதியப் பாகுபாட்டை (discriminatory wages on basis of sex) ஒழிக்க அரசு ஏன் இன்னும் உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். சம ஊதியக் கொள்கையை அரசு வெறும் 'பரிந்துரையாக' (recommendation) மட்டும் பார்க்காமல், அதை ஒரு கட்டாயமான விதியாகக் கருத வேண்டும் என்பது அவரது வாதமாக இருந்தது.

தேயிலைத் தோட்டங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான ஊதியத்தில் பெரிய வித்தியாசம் நிலவுவதை அவர் எதிர்த்தார். உதாரணமாக, தேயிலை இலை பறிக்கும் பணியில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் ஒரே வேலையைச் செய்தாலும், ஆண்களுக்கு 50 பைசா வரை கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டது. உண்மையில், இலை பறிக்கும் பணியில் பெண்களே அதிக உற்பத்தித் திறன் கொண்டவர்களாக இருந்தும், அவர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதை அவர் கண்டித்தார். சம ஊதியச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, தேயிலைத் தோட்டங்களில் பெண் தொழிலாளர்களின் வேலைப்பளு (Workload) அதிகரிக்கப்பட்டது குறித்தும் அவர் கேள்விகளை எழுப்பினார். சம ஊதியம் வழங்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக நிறுவனங்கள் பெண்களைப் பணிநீக்கம் செய்வது அல்லது அவர்களது வேலை நேரத்தை அதிகரிப்பது போன்ற தந்திரங்களைக் கையாள்வதை அவர் சுட்டிக்காட்டினார்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் (Pharmaceutical Industries) பணிபுரியும் பெண்கள் திருமணம் செய்து கொண்ட உடனேயே வேலைநீக்கம் செய்யப்படும் முறையை அவர் கடுமையாக எதிர்த்தார். இது பெண்களுக்கு பொருளாதாரச் சுதந்திரம் கிடைக்கவிடாமல் தடுக்கும் பாகுபாடான செயல் என்று அவர் வாதிட்டார். பெண்கள் திருமணமாகாமல் இருக்க வேண்டும் என்று நிறுவனங்கள் நிபந்தனை விதிப்பது அடிப்படை உரிமை மீறல் என்றார். தனியார் விமான நிறுவனங்கள் பெண்களை விமானிகளாகப் பணியமர்த்தும்போது, இந்தியன் ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷன் (IAC) போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பெண்களை விமானிகளாக(Pilots) நியமிப்பதில் பாகுபாடுகள் காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

ரேணு சக்ரவர்த்தி போன்றே பார்வதி கிருஷ்ணனும் குழந்தை மணம், வரதட்சணை, மகப்பேறு விடுப்பு உட்பட பெண்களின் உரிமைக்கான பல்வேறு வாதங்களை முன்வைத்து நாடாளுமன்றத்தில் போராடியவராவார். பார்வதி கிருஷ்ணன் 1954 –1957ல் மாநிலங்களவை உறுப்பினராகவும், 1957–1962 மற்றும் 1974–1980ல் மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். குறிப்பாக, சம ஊதியம் (Equal Pay), சம ஊதியச் சட்டம் அமலாக்கம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர்கள் குறித்து இவர் முன்வைத்த வாதங்கள் இன்றைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

  • சம ஊதியச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ கடமைகளான ஆலோசனைக் குழுக்களை (Advisory Committees) அமைப்பதிலும், புகார்களைக் கையாள சிறப்பு அதிகாரிகளை (Special Officers) நியமிப்பதிலும் மாநில அரசுகள் காட்டும் சுணக்கத்தை பற்றி பார்வதி கிருஷ்ணன் கேள்விகளை எழுப்பினார். மாநில அரசுகள் தங்கள் கடமைகளைச் செய்வதில் அலட்சியமாக (Smug and complacent) இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். தொழிற்சங்கங்கள் அனுப்பும் தீர்மானங்கள் மற்றும் புகார்கள் மீது மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று அவர் கோரினார்.
  • சம ஊதியச் சட்டத்தின் பலன்கள் வெறும் தோட்டத் தொழிலாளிகளுக்கு மட்டும் அல்லாமல், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் (agricultural labourers and construction workers) போன்ற அமைப்புசாரா துறையினருக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
  • அமைப்புசாரா தொழிலாளர்களைப் பாதுகாக்க, 1948-ஆம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில் (Minimum Wages Act) திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான மசோதாவை (Amendment Bill) அவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் மூலம் அனைத்து வகையான வேலைகளுக்கும் குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சம ஊதியம் கிடைப்பதை உறுதி செய்ய முயன்றார்.
  • அமைப்புசாரா துறையின் மற்றொரு முக்கியப் பிரிவான பீடி தொழிலாளர்களின் வேலை நிலைமைகளை மேம்படுத்தவும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவும் தனி மசோதாவைக் கொண்டு வந்தார்.

சம ஊதியச் சட்டம் என்பது காகிதத்தில் மட்டும் இல்லாமல், உரிய நிர்வாகக் கட்டமைப்பு (சிறப்பு அதிகாரிகள் மற்றும் குழுக்கள்) மூலம் விரைவாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பதையும், அது அனைத்துத் துறை பெண் தொழிலாளர்களையும் சென்றடைய வேண்டும் என்பது அவரது வாதங்களின் மையமாக இருந்தது. பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்துவது மற்றும் திருமணப் பதிவு ஆகியவற்றில் அவர் அதிக கவனம் செலுத்தினார்.

Ø  திருமணங்கள் அனைத்தும் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும் (Compulsory Registration) என்று அவர் மிக வலுவாக வாதிட்டார். இதுவே திருமணத்திற்கான இறுதி ஆதாரமாக இருக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பெண்களை வேலைக்காரிகளாக நடத்தும் திருமணங்கள் மற்றும் செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் நடக்கும் போலித் திருமணங்களில் இருந்து பெண்களைப் பாதுகாக்கப் பதிவு அவசியம் என்று அவர் கூறினார்.

Ø  பெண்களின் திருமண வயதை 18 ஆக உயர்த்துவது, அவர்கள் ஒரு அறிவுள்ள தாயாகவும், சிறந்த குடிமகளாகவும் உருவாக உதவும் என்று அவர் வாதிட்டார். 15 வயதில் ஒரு பெண் தனது வாழ்க்கைத் துணையைப் பற்றிச் சரியான முடிவெடுக்க முடியாது என்பது அவரது கருத்து.

Ø  முதியோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள குழந்தைகளை (குறிப்பாக மகன்களை) நம்பியிருக்கும் நிலையை மாற்ற வேண்டும். அரசு முதியோருக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கினால் மட்டுமே, சிறிய குடும்பக் கொள்கை மக்களிடையே வேரூன்றும் என்று அவர் வாதிட்டார்.

Ø  விவாகரத்து கோரும் போது "மனநலப் பாதிப்பு" (Unsound mind) என்ற காரணத்தைத் தவறாகப் பயன்படுத்திப் பெண்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க, அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்களின் சான்றிதழ் அவசியம் என்று அவர் கூறினார். மேலும், விவாகரத்து வழக்குகளை ஆறு மாதங்களுக்குள்ளும், மேல்முறையீடுகளை மூன்று மாதங்களுக்குள்ளும் விரைவாக முடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ரேணு சக்ரவர்த்தி மற்றும் பார்வதி கிருஷ்ணன் இருவரும் வரதட்சணைத் தடுப்புச் சட்டத்தை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வலுவான கருத்துக்களை முன்வைத்தனர். வரதட்சணை முறையை ஒரு "வணிகமயமாக்கப்பட்ட தீமை" என்றும், சமுதாயத்தில் இன்னும் நிலவும் ஒரு வகை "நிலப்பிரபுத்துவச் சுரண்டல்" என்றும் ரேணு சக்ரவர்த்தி குறிப்பிட்டார். பெண்கள் தங்கள் தந்தையின் சொத்தில் சமமான பங்கை அனுபவிக்க வேண்டும் என்றும், பொருளாதார ரீதியாக அவர்கள் சுதந்திரமாக இருக்கும்போது வரதட்சணைப் பிரச்சினை குறையும் என்றும் வலியுறுத்தினார். வரதட்சணை கேட்பதைத் தண்டனைக்குரிய குற்றமாக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளின் அனுமதியின்றி நீதிமன்றங்கள் நேரடியாகக் குற்றங்களை விசாரிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்.

வரதட்சணை தடுப்புச் சட்டத்தைக் கொண்டு வரும்போது அரசு மிகவும் தயக்கத்துடனும், தோல்வி மனப்பான்மையுடனும் செயல்படுவதாக பார்வதி கிருஷ்ணன் அரசை விமர்சித்தார். திருமணம் என்பது வரதட்சணையை நிபந்தனையாகக் கொண்ட ஒரு "அருவருப்பான ஒப்பந்தமாக" மாறக்கூடாது என்றும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் என்ற பெயரில் இத்தீமை பாதுகாக்கப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். வரதட்சணை கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் பண அபராதம் விதிப்பதை விட சிறைத்தண்டனை விதிப்பதே சமூக மனசாட்சியைத் தூண்ட உதவும் என்று அவர் கருதினார். வரதட்சணை குற்றங்களை காவல்துறை நேரடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் வகையில் (Cognizable) மாற்ற வேண்டும், அப்போதுதான் சட்டம் திறம்படச் செயல்படும் என வலியுறுத்தினார்.

ரேணு சக்ரவர்த்தி, பார்வதி கிருஷ்ணன் இருவருமே வரதட்சணையை மனித கண்ணியத்திற்கு எதிரான ஒன்றாகக் கருதினர். மேலும், இருவருமே சமூக மற்றும் பொருளாதார மாற்றங்கள் இன்றி வெறும் சட்டங்கள் மட்டும் சமூகத் சீர்திருத்தங்களைக் கொண்டு வராது என்பதில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர். இருவரின் த்தகைய முற்போக்கான கருத்துகள், இந்திய பெண்களின் உரிமைகளை மேம்படுத்துவதிலும், சமூகத்தில் அவர்களுக்குச் சமமான அந்தஸ்தைப் பெற்றுத் தருவதிலும் முக்கியப் பங்காற்றின. நூற்றாண்டு கால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்ட வரலாற்றில், பெண்களை ஒடுக்கும் நிலவுடைமை ஆணாதிக்கத்தை எதிர்த்தும் பெண் தொழிலாளர்களை சுரண்டிய முதலாளித்துவத்திற்கு எதிராகவும் உரத்த குரலை எழுப்பி பெண்களின் உரிமைகளை காத்த கம்யூனிஸ்ட் போராளிகளாக இருவரின் பங்களிப்பும் நீங்கா இடம்பெறும். 

ஜி.மஞ்சுளா