திருத்தல்வாதம் எதிர்ப்போம்! மார்க்சியம் காப்போம்!
மார்க்சியத்தை திருத்தும் முயற்சிகள் தமிழகத்தில் எப்போது யாரால் தொடங்கப்பட்டது என்ற வரலாற்றை அறிவதற்கு ‘மார்க்சியம் சில போக்குகள்’ என்ற தலைப்பில் தோழர் எஸ்.தோதாத்ரி எழுதிய நூல் நமக்கு பெரிதும் உதவுகின்றது. 1983ல் இருந்து 2004 வரை ஜனசக்தி, தாமரை, செம்மலர், சமூக விஞ்ஞானம் ஆகிய இதழ்களில் அவர் எழுதிய 6 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் உள்ளது.
அதேபோல் மார்க்சியத்தின் மிக முக்கிய அடிப்படையான அடித்தளமும் மேற்கட்டுமானமும் பற்றி தோழர் அ.கா.ஈஸ்வரன் எழுதியுள்ள ‘சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி மார்க்சியம்’ என்ற நூல் மார்க்சியத்தின் அடிப்படைகள் எவை என்பதை தெளிவாக விளக்குவதோடு ‘பண்பாட்டு மார்க்சியம்’ என்ற பெயரில் மார்க்சியம் எவ்வாறு திருத்தப்படுகின்றது என்பதையும் அற்புதமாக விளக்குகிறது.
தோழர் தோதாத்ரி நூலில், ‘மேலை மார்க்சியம்’ மற்றும் ‘தமிழகத்தில் மார்க்சிய போக்குகள்’ ஆகிய தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டுள்ளவை கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ், தமிழவன் போன்றோர் மார்க்சியத்திற்கு எதிரான பின்நவினத்துவ கருத்துகளை கொண்டவர்கள் என்பதையும் அவர்கள் மார்க்சியத்திற்கு எதிராக பேசுவதற்கான காரணங்கள் எவை என்பதையும் தெள்ளத் தெளிவாக நமக்கு விளக்குகின்றன.
பொருள் உற்பத்திதான் மனிதனது செயல்களை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது. உணர்வு (மனது) என்பது இயற்கை, சமூகம் ஆகியவற்றின் பிரதிபலிப்பே ஆகும். இதைதான் மார்க்ஸ் “மனிதர்களின் உணர்வு அவர்களின் வாழ்க்கை நிலையை நிர்ணயிப்பதில்லை. அவர்களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர்களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது” என கூறினார். இது மார்க்சிய அடிப்படையாகும்.
ஆனால் இந்த மார்க்சிய-லெனினிய கருத்தை விமர்சனம் செய்யும் போக்கில் 1920களில் உருவானதே ‘மேலைய மார்க்சியம் ’எனவும் லுகாக்ஸ், அல்தூசர் மற்றும் அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் பிராங்பர்ட் குழுவினர் மார்க்சிய சிந்தனையை வளர்ப்பதாக கூறி முற்றிலும் மார்க்சியத்திலிருந்து விலகியதை தனது நூலில் தோதாத்ரி விளக்குகிறார்.
மனிதகுலம் தன்னுடைய அடிப்படை தேவைகளான உணவு, இருப்பிடம், உடை போன்றவற்றை பெறுவதற்காக உழைப்புகருவிகளை தோற்றுவித்தது. உழைப்பு கருவிகளிலும், மனித உழைப்புத் திறமையிலும் படிப்படியான வளர்ச்சி ஏற்படுகிறது. மனிதகுலம் கற்கருவியில் தொடங்கி கம்ப்யூட்டர் வரை வந்தடைந்துள்ளதை நாம் அறிவோம்.
உற்பத்தி அனுபவமும், திறமையும் கொண்ட மக்களின் உழைப்பு சக்தி மற்றும் உற்பத்தி சாதனங்கள் சேர்ந்து உற்பத்திசக்தி என அழைக்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி காரணமாக, முதலில் கூட்டுவாழ் பொதுவுடமை சமூகமாக இருந்த நிலைமாறி அடிமைசமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம் முதலாளித்துவ சமூகம் என சுரண்டலை அடிப்படையாக கொண்ட வர்க்க சமூகங்கள் தோன்றுவதையும் இறுதியில் அது சோசலிச சமூகமாக மாற்றமுறும் என்பதையும் மார்க்சியம் வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில் அறிவியல்பூர்வமாக விளக்குகிறது.
சமூகத்தின் வளர்ச்சிக்கும் மாறுதலுக்கும் அடிப்படையாக விளங்குவது உற்பத்திசக்திகள், உற்பத்தி உறவுகள் இரண்டையும் உள்ளடக்கிய உற்பத்திமுறை என்றும் இந்த பொருளாதார அமைப்பே அடித்தளம் எனவும் தத்துவம், சட்டம், மதம், பண்பாடு, கலை ஆகியவை அந்தந்த குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்ப தோன்றும் மேற்கட்டமைப்பு எனவும் மார்க்சியம் வரையறுக்கிறது.
இந்த அடித்தளம் மேற்கட்டமைப்பு என்ற மார்க்சிய வரையறையை மாற்றுவதில் இருந்துதான் பின்நவீனத்துவவாதிகளின் திருத்தங்கள் துவங்குகின்றன .எது எதனை தீர்மானிக்கிறது என்று கேள்வி எழுப்புவோமானால் பொருளாதார அடித்தளமே மேற்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது என்று மார்க்சியம் கூறுகிறது.
ஆனால் மேற்கட்டமைப்பு அடித்தளத்தின் பிரதிபலிப்பல்ல எனக்கூறி ‘பண்பாட்டு மார்க்சியவாதிகள்’ மார்க்சிய அடிப்படையையே மறுத்துவிடுவதை தோழர் அ.கா.ஈஸ்வரன் சுட்டிக்காட்டுகிறார் .“லுகாக்ஸ், கிராம்சி ஆகியோர் ஜெர்மனியில் நாஜிக்களும், இத்தாலியில் பாசிஸ்ட்டுகளும் வெறும் பிரச்சாரத்தின் மூலம் சர்வாதிகார அரசியலை நிலைநாட்டி விட்டதாகவும் இதன்மூலம் பொருளாதார காரணங்கள் சமூகஅடிப்படை என்பது பின்னுக்கு தள்ளப்பட்டதாக தவறாக புரிந்துகொண்டு ‘பண்பாட்டு மார்க்சியம்’ என்ற சிந்தனை போக்கை தொடங்கியதாக தோழர் அ.கா.ஈஸ்வரன் குறிப்பிடுகிறார்.
ஒரு பொருள் தோன்றாத வரை அதைப் பற்றிய கருத்து தோன்றவே இயலாது. உதாரணத்திற்கு மிக எளிமையாக கூறுவதென்றால் செல்போன் தோன்றாதவரை அதன் தீமைகளை பற்றிய கருத்துகளை பேசுவதற்கு வாய்ப்பே கிடையாது. இதையே ஆழமாக கூறுவதென்றால், நவீன கனரக இயந்திர தொழில் வளர்ச்சி ஏற்பட்டு முதலாளித்துவ சமூகத்தின் மிகை உற்பத்தியால் சந்தை விரிவாக்கத்திற்கான தேவை அதிகரித்து அப்பொருளாதார காரணங்களால்தான் உலகபோர்கள் நடைபெற்றன. இவற்றின் உச்சக்கட்டமாக பாசிசவடிவ அரசும் அதற்கான கருத்துகளும் அதை எதிர்ப்பதற்கான கருத்துகளும் தோன்றின.
பண்பாட்டு மார்க்சியர்கள் கூறுவதுபோல் பிரச்சாரத்தின் மூலம் ஒரு சர்வாதிகார அரசை நிலைநாட்டவே முடியாது. சந்தைக்கான நாடுபிடிக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கிடையிலான போட்டியில் இட்லரின் பாசிச அரசு தனது அரசு படைகளை கொண்டுதான் ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது என்பதும் லட்சக்கணக்கான சோவியத் செஞ்சேனை தோழர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து அப்படைகளை வென்று பாசிசத்தை முறியடித்த வரலாறு இருக்கும்போது பண்பாட்டு மார்க்சியவாதிகளின் கூற்று எவ்வளவு அபத்தமானது என சொல்லாமலே விளங்கும்.
ஆனால் மேற்கட்டமைப்பின் தாக்கத்தை மார்க்சியம் மறுக்கவே இல்லை. இது குறித்து தோழர் அ.கா.ஈஸ்வரன் தனது நூலில் “உற்பத்தியும் மறுவுற்பத்தியும் அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தியாகும். ஆனால் மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தாக்கம் செலுத்துவதையும் இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் மறுத்திடவில்லை……. இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை…….. இந்த சார்பான தாக்கம் மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிட முடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும் தீர்மானகரமான சக்தியாகவும் இருக்கிறது” என தெளிவுபடுத்துகிறார்.
தமிழகத்தில் அ.மார்க்ஸ் உள்ளிட்டோர் மார்க்சிய கருத்துகளை மறுத்துவிட்டு லுகாக்ஸ், கிராம்சி போன்றோரின் கருத்துகளைதான் உயர்த்தி பிடிக்கின்றனர். மார்க்சியத்தின் அடிப்படைகளை மறுப்பதை ‘மார்க்சியத்தின் பெயரால்’ என்ற தனது நூலில் அ.மார்க்ஸ் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
“மார்க்சியத்தை பயில்வது என்பது என்றால் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ என்பதாக ஒரு பாரம்பரியத்தை உலகெங்கிலுமுள்ள பொதுவுடமை இயக்கங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்தப் பாரம்பரியத்திலும் கூட தேர்வு செய்யப்பட்ட ஒருசில நூல்கள் மட்டுமே பயிலப்படுவது என்பது தவிர இந்த பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட கிராம்சி போன்ற புரட்சி வெற்றி பெறாத நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் அல்தூசர் போன்ற கட்சிக்கு அப்பாற்பட்டு நின்று மார்க்சியத்தை வளப்படுத்தியவர்கள் ஆகியோர்கள் பயிலப்படுவதில்லை……என மிகுந்த வருத்தமும் கொள்கிறார் அ.மார்க்ஸ்.
இந்த காரணத்தால்தான் தமிழகத்தில், இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றுபொருள்முதல்வாதம், பொருளாதார அடித்தளமே தீர்மானிக்கும் சக்தி, வர்க்கப் போராட்டம், பிரதிபலித்தல் கோட்பாடு உள்ளிட்ட செவ்வியல் வடிவத்தில் மார்க்சியத்தை சிறப்பாக போதித்த நா.வானமாமலை, க.கைலாசபதி, க.சிவத்தம்பி ஆகியோரை இந்த ‘புதிய இடதுசாரிகள்’ எனப்படுவோர் ஏற்றுக் கொள்வதில்லை.
கோவைஞானி, எஸ்.என்.நாகராஜன், எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் உள்ளிட்டோரை ‘புதிய இடதுசாரிகள்’ என அழைக்கலாம் என தோழர் தோதாத்ரி.தான் குறிப்பிடுகிறார் (இவர்களை இடதுசாரிகள் என அழைப்பதே சரியானது இல்லை என தோன்றுகிறது). அது ஒருபுறம் இருக்கட்டும்.ஆனால் இவர்களின் செயல்பாட்டிற்கு ஊக்கமளித்த புறகாரணங்களை தெளிவாக முன்வைக்கிறார் தோழர் தோதாத்ரி.
“புதிய இடதுசாரிகள் தமிழகத்தில் பல குழுக்களாகச் செயல்பட்டு வருகிறார்கள். இவர்களுடைய தோற்றத்தை 1970களில் இருந்தே காணலாம்.இவர்களது செயல்பாட்டிற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒன்றாவதாக, மார்க்சிய எதிர்ப்பு. இரண்டாவதாக, கட்சியின் செயல்பாட்டில் ஏற்பட்ட அதிருப்தி .மூன்றாவதாக, கட்சியில் ஏற்பட்ட பிளவும், அதன் காரணமாக இடம் பெற்ற தத்துவார்த்த குழப்பமும். நான்காவதாக, இடதுசாரி முகாம் பல பகுதிகளாகப் பிளவுண்டு போனமை. ஐந்தாவது, வலுவான தலைமை இல்லாது போனது. ஆறாவது, தன்னார்வக் குழுவினர் பலர் மார்க்சியம் பற்றிப் பேசத் தொடங்கியது. இக்குழுவினர் சிலர் திட்டமிட்ட முறையில் ஐரோப்பிய கம்யூனிசத்தை பரப்புவதற்கு இங்கு எடுத்துக் கொண்ட முயற்சி. ஏழாவது, கட்சி சார்ந்து மார்க்சியத்தை போதித்தவர்கள் வட்டத்திற்கு வெளியே மார்க்சியத்தை ஒரு பண்டித விவகாரமாக அணுகி அதனைப் பல தத்துவங்களுடன் இணைத்துப் பார்க்கும் மனோபாவம் வளர்ந்தமை.
இவையனைத்திற்கும் மேலாக இங்கு உள்ள முதலாளித்துவப் பத்திரிகைகள் பல இந்தவகை விவாதங்களை ஊக்குவித்து ஆதரவு அளித்தமை புதிய இடதுசாரிகளின் கருத்துகள் பரவுவதற்கு பின்புலமாக அமைந்தது எனலாம்” என்கிறார் தோழர் தோதாத்ரி.
இந்த சூழல்தான் வர்க்கம், அரசு, வர்க்கப் போராட்டம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என மார்க்சியத்தின் அடிப்படைகள் அனைத்தையும் மறுத்துவிட்டு மார்க்சிய முகமூடியை அணிந்துக் கொண்டு தங்களை மார்க்சியவாதிகள் என கூறிக் கொள்ளும் வலுவை இவர்களுக்கு தருகிறது.பின்நவீனத்துவவாதிகளான இவர்கள் முதலாளித்துவ சீர்திருத்தவாத தலைவர்களை உயர்த்தி பிடிப்பதும், அவர்களுடன் கைகோர்ப்பதும் எதேச்சையானது அல்ல. இவர்களுக்கு இடையிலே நிலவும் கருத்தியல் ஒற்றுமையே முதலாளித்துவ அரசின் ஆதரவாளர்களாக இவர்கள் ஒருங்கிணைந்து செயல்ப காரணமாகிறது.
பக்கம்பக்கமாக மார்க்சியத்திற்கு எதிராக இவர்கள் எழுதி குவித்திருந்தாலும் அக்கருத்துகள் சாமான்யமக்களை சென்று சேரவில்லை என்பது ஒரு உண்மை. எனினும் மார்க்சியத்தை பயிலத் தொடங்கும் இளம்தலை முறையினர் மத்தியில் இவர்களது எழுத்துகள் மிகப் பெரிய கருத்தியல் குழப்பத்தை தோற்றுவிக்கின்றன. பொதுவெளியில் மார்க்சியர்களாக வலம்வருவதும், இடதுசாரி முகாமில் இவர்கள் மார்க்சிய அறிஞர்களாக அங்கீகரிக்கப்படுவதும் உண்மையான மார்க்சியக் கருத்துகளை கொண்டு செல்வதற்கும் மார்க்சிய வழியில் சமூகத்தை ஆய்வு செய்வதற்கும் பெரும் தடைகளாக இருக்கின்றன.
எனவே இவர்களை அம்பலப்படுத்துவது உண்மையான மார்க்சியர்களின் அத்தியாவசிய பணியாக உள்ளது. அதற்கு மார்க்சிய தத்துவத்தை அதன் அடிப்படையை பிழையின்றி கற்க தோழர் தோதாத்ரி மற்றும் தோழர் அ.கா.ஈஸ்வரனின் நூல்களை படிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகிறது.




புதியஇடதுசாரிகளை இடது சாரிகளே இல்லை என்பதை
ReplyDeleteபுரிந்துகொள்ள இளைஞர்களுக்கு மார்க்சிஸயத்தின்
அதன்அடிப்படைள் எளியமுறையில்கொண்டு போகப்படவில்லை
மார்க்ஸிஸ்ட்கள்என்ற
பெயரில்எண்ணற்றக
ட்சிகள்எல்லாத்தைவிடவும்
பிளவுக்குமேல்பிளவுகளைசந்தித்துவரும் ML.குழுக்கள்
ஒவ்வொன்றும்தான்Original
Mlகுழுஎன்றுகூறிக்கொள்தும்
மிகவும்தேக்கநிலையை
உருவாக்கியிருக்கிது
அதுவும்தமிழகMl குழுக்கள்
இளைஞர்களுக்கு
மிகமோசமானகசப்பான
சிறிதும்மனிதத்தன்மையற்ற..
என்றஅனுபவத்தை
ஏற்படுத்தியிருக்கிறுது
யுத்தகளத்தில்அடிபட்டுசிதைந்ததைவிடவும்வலியைகொடுத்திருக்கிறது.